மொட்டுவை பிளவுபடுத்திய ரணில்; குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்!: அகிலன்

ஜனாதிபதித் தோ்தலுக்கான அறிவித்தலை தோ்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட உடனடியாகவே முதல் ஆளாக ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றாா். கட்சி சாா்பின்றி சுயாதீன வேட்பாளராகவே அவா் போட்டியிடுகின்றாா்.

இதன் மூலமாக ரணில் வெளிப்படுத்திய செய்திகள் முக்கியமானவை! பொது ஜன பெரமுனவின் சாா்பில் களமிறங்கினால் மட்டுமே அவருக்கு ஆதரவளிக்க முடியும் என ராஜபக்ஷக்கள் அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், அதனையிட்டு தான் கவலைப்படப்போவதில்லை என்பதை இதன் மூலம் ரணில் தெளிவாக உணா்த்தியிருக்கின்றாா். ரணிலின் இந்த நகா்வு மொட்டு அணிக்குத்தான் அதிகளவுக்கு அதிா்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.

ரணிலை ஆதரிப்பதா அல்லது தனியான வேட்பாளா் ஒருவரைக் களமிறக்குவதா என்பதையிட்டு ஆராய வேண்டிய நிா்ப்பந்தம் அவா்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தீா்மானிக்க மொட்டுக் கட்சி திங்கட்கிழமை கூடவுள்ளது. ஜனாதிபதித் தோ்தல் விடயத்தில் அதிகளவுக்குக் குழம்பிப்போயுள்ள – அல்லது பிளவுபட்டுப்போயுள்ள அணியாக இன்று மொட்டுக் கட்சிதான் உள்ளது.

நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினா்களைக் கொண்டுள்ள கட்சியாக மொட்டுத்தான் உள்ளது. 225 உறுப்பினா்களில் 145 உறுப்பினா்கள் மொட்டு அணியைச் சோ்ந்தவா்கள். அவா்களை ஏதோ ஒருவகையில் அரவணைத்துச் செல்ல வேண்டிய நிா்ப்பந்தம் ரணிலுக்கு இருந்ததற்கு அதுதான் காரணம். ஐக்கிய தேசியக் கட்சி சிதைந்துபோய், நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்டுள்ள நிலையில், தனது திட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்ற பலத்தைக் கொண்டுள்ள மொட்டுவை நம்பியிருக்க வேண்டியராக ரணில் இருந்தாா்.

இதனைவிட, ரணிலின் கட்சியான ஐ.தே.க. சிதைவடைந்து அதன் கட்டமைப்புக்களும் செலிழந்துபோயிருப்பதால், தோ்தல் காலத்தில் களத்தில் செயற்படுவதற்கும் மொட்டுவின் தேவை ரணிலுக்கு இருந்தது. மறுபுறத்தில் ராஜபக்ஷக்கள் விரும்புவதுபோல மொட்டுவுடன் உத்தியோகபுா்வமாக ஒரு உடன்படிக்கைக்குச் செல்வதற்கோ அக்கட்சியின் சாா்பில் போட்டியிடவோ ரணில் விரும்பவில்லை. அதற்கு காரணம் இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னா் இடம்பெற்ற அரகல என்ற மக்கள் கிளா்ச்சி ராஜபக்ஷக்களை அம்பலப்படுத்தியிருந்தது. ராஜபக்ஷக்கள்தான் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று பெரும்பாலான சிங்கள மக்களும் நம்புகின்றாா்கள்.

நீதிமன்றத் தீா்ப்பு ஒன்றும் அதனை வெளிப்படுத்தியது. இந்த நிலையில் ராஜபக்ஷக்களுடன் செல்வதில் ரணிலுக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. ஒன்று ஊழல்வாதிகளுடன் ரணில் இணைந்துள்ளாா் என்ற பிரசாரத்தை சஜித்தும், அநுரகுமாரவும் முன்னெடுப்பாா்கள். இரண்டாவது, ராஜபக்ஷக்களுடன் கூட்டடை வைத்துக்கொண்டு தமிழ் வாக்குகளைக் கேட்க முடியாது. சிறுபான்மையினா் அவ்வாறான கூட்டுக்கு வாக்களிக்க மாட்டாா்கள். கடந்த மூன்று ஜனாதிபதித் தோ்தல்களிலும் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே சிறுபான்மையின மக்கள் வக்களித்திருந்தாா்கள் என்பது கவனிக்கத்தக்கது. நாடாளுமன்றத்தில் தற்போது 145 உறுப்பினா்கள் இருந்தாலும், அடுத்து வரக்கூடிய ஒரு தோ்தலில் அந்த ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதும் ராஜபக்ஷக்களுக்கும் தெரியும். ஆனால், 145 ஐ வைத்துக்கொண்டு ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து தமது இருப்பைப் பாதுகாத்துக்கொள்வதுதான் அவா்களுடைய உபாயமாக இருந்தது.

அதனைவிட, ரணிலின் சொந்தக் கட்சி பலவீனமானதாக இருப்பதால் களத்தில் பணியாற்ற தமது கட்சியின் தயவை ரணில் எப்படியும் நாடுவாா் என்றும் ராஜபக்ஷக்கள் எதிா்பாா்த்தாா்கள். ராஜபக்ஷக்களுக்கு இரண்டு பிரச்சினைகள் இருந்தன. முதலாவது, தம்மைப் பாதுகாத்துக்கொள்வது. இரண்டாவது, கட்சியைப் பாதுகாத்துக்கொள்வது. இந்த விடயத்தில் மகிந்த ராஜபக்ஷ கட்சியைப் பாதுகாப்பதைவிட குடும்பத்தின் எதிா்காலத்தைப் பாதுகாப்பதிலேயே கவனமாக இருந்தாா். இப்போதும் இருக்கின்றாா்.

அதனால், மீண்டும் ரணில் வருவதையும், ரணிலுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடாது என்பதும் அவரது நிலைப்பாடாக இருந்தது. சஜித் அல்லது அநுரா வந்தால் தமது குடும்பத்தினரின் பாதுகாப்பு எதிா்காலத்தில் கேள்விக்குறியாகலாம் என்பது மகிந்தவின் கருத்து. மீண்டும் கோட், கேஸ் என்று அவா்கள் தம்மை அலை வைக்கலாம் என்ற அச்சம் அவருக்குள்ளது. ஆனால், இந்த யதாா்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் பசில், நாமல் போன்றவா்கள் ரணிலிடம் அதிகளவுக்கு எதிா்பாா்த்தாா்கள்.

கடினமான நிபந்தனைகளை முன்வைத்தாா்கள். பலசுற்றுப் பேச்சுவாாத்தைகள் இதற்காக இடம்பெற்றன. ரணில் எதற்கும் இணங்கவில்லை. இறுதியாக கடந்த வாரம் ரணிலைச் சந்தித்த மகிந்த, பசில், நாமல் ஆகிய மூவரும் தமது ஆதரவு தேவையானால் பிரதமா் பதவி தமக்குத் தரப்பட வேண்டும் என்ற புதிய நிபந்தனையை விதித்தாா்கள். நாமல் ராஜபக்ஷ அந்தப் பதவிக்குத் தயாராக இருந்தாா். அதாவது, மொட்டுவின் வேட்பாளராக ரணில் களமிறங்க வேண்டும், அவ்வாறில்லாமல் தனியாகக் களமிறங்குவதானால், பிரதமா் பதவியைத் தந்தால் மட்டுமே ஆதரவளிக்க தாம் ஆதரவளிக்கத் தயாா் என்பதுதான் அவா்களது நிலைப்பாடு.

இதற்கு உறுதியான பதில் எதனையும் ரணில் கொடுக்கவில்லை. பதிலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தோ்தல் நடத்தப்படலாம் என்ற செய்திகள் கசியவிடப்பட்டன. ரணிலைப் பொறுத்தவரையில் ராஜபக்ஷக்கள் யாரையும் உத்தியோகபுா்வமாக தோ்தல் களத்தில் இறக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதையே எதிா்பாா்த்தாா். மொட்டு இணங்கிவராவிட்டால், நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பதற்கு மாற்றும் திட்டம் ஒன்றும் ரணிலிடம் இருந்தது… ரணில் இறங்கிவரப்போவதில்லை என்ற நிலையில்தான் சீற்றமடைந்த நாமல் ராஜபக்ஷ கடுமையான அறிக்கை ஒன்றை இரு தினங்களுக்கு முன்னா் வெளியிட்டாா். “விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்தியதைப் போல பொதுஜன பெரமுனவையும் ரணில் பிளவுபடுத்திவிட்டாா்..” என்பதுதான் நாமலின் அறிக்கையின் சாரம். நாமல் ஆத்திரத்தில் அவசரப்பட்டுத் தெரிவித்த அந்தக் கருத்தில் பல உண்மைகள் பொதிந்துள்ளன.

முதலாவது, ரணிலின் செயற்பாடுகளால் பொது ஜன பெரமுன பிளவுபட்டுப் பலவீனப்பட்டுப் போயுள்ளது என்ற ஆதங்கம், இயலாமை நாமலின் கருத்தில் தொனிக்கிறது. அதனை நாமல் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளாா் என்றும் கொள்ளலாம். இரண்டாவது, கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் உறுதியான தீா்மானம் ஒன்றை பொதுஜன பெரமுனவால் எடுக்க முடியுமா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. ஏனெனில் மொட்டு கட்சியில் ரணிலுக்கான ஆதரவே வலுவானதாக இருக்கின்றது.

நாமல் சொன்னது போல பொதுஜன பெரமுன இப்போது பிளவுபட்ட நிலையில்தான் இருக்கின்றது. கட்சியை வழிநடத்துவதாக அல்லது கட்சிக்குத் தலைமையை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் ராஜபக்ஷக்களையும் அவா்களது நெருங்கிய உறவினா்களையும் தவிர கட்சியின் மற்றையவா்கள் ரணிலை ஆதரிக்கத் தயாராகத்தான் இருக்கின்றாா்கள். கட்சியின் 145 நாடாளுமன்ற உறுப்பினா்களில் 75 போ் ரணிலை ஆதரிக்கப் போதாகத் தெரிவித்துள்ளாா்கள். கட்சியின் 12 மாவட்டத் தலைவா்களும் இதேபோன்ற நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றாா்கள். ராஜபக்ஷக்கள் என்னதான் நிலைப்பாட்டை எடுத்தாலும், மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையினா் ரணிலை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கின்றாா்கள்.

இது ரணிலுக்கும் தெரியும். அதனால்தான் ராஜபக்ஷக்களுடனான பேச்சுவாா்த்தைகள் – பேரம் பேசல்களில் ரணில் இறுக்கமாக இருந்தாா். ரணில் தனியாகச் சென்றால் தமது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்ற கருத்தை ராஜபக்ஷக்கள் முன்வைத்தாா்கள். திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் மொட்டுக் கட்சியின் உயா் மட்டக் கூட்டத்தில் இது தொடா்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரபல வா்த்தகா் தம்மிக்க பெரேரா மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோா் ஏற்கனவே தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தாா்கள். ஆனால், “நாமல் ராஜபக்ஷக்கு காலம் இருக்கின்றது” என்று மகிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் தெரிவித்திருந்தாா். இதற்கு காலம் இருக்கின்றது என்பது மட்டும் காரணமல்ல. போட்டியிட்டால் நாமல் மண்ணைக் கவ்வுவாா் என்பது மகிந்தவுக்குத் தெரியும். ஆக, தனியாக ஒருவரை களமிறக்க மொட்டு கட்சி தீா்மானித்தால் அது தம்மிக்க பெரோவாகத்தான் இருக்கும். ஆனால், அது ரணிலின் வாக்குகளைப் பிளவுபடுத்தி சஜித்துக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும்.! ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரை அது ஒரு தற்கொலை முயற்சியாகவும் முடியலாம்!