இரத்த பரிசோதனைக்கான ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்த வவுனியா மாணவிக்கு வீட்டுத்திட்டம்

இரத்த பரிசோதனைக்கான தானியங்கி ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்த வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி றோகிதா புஸ்பதேவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு சென்ற வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான தர்மபால செனவிரட்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், ஜனாதிபதியின் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்கான இணைப்பாளருமான கேணல் ரட்ணபிரிய பந்து, வெலிஓயா மங்களராமய விகாரதிபதி கியூலேகெதர மங்கல தேரர், இந்து மதகுரு ரட்ணம் உள்ளிட்ட குழுவினர் பாடசாலை அதிபர் பி.கமலேஸ்வரி, சாதனை மாணவி றோகிதா புஸ்பதேவன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து கௌரவிப்பு வழங்கினர்.

இதன்போது குறித்த மாணவியின் குடும்பநிலை தொடர்பாக கேட்டறிந்த அந்த குழு, சாதனை மாணவி மற்றும் அவரது சசோதரி ஆகியோரின் கல்வி தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், மாணவி வாடகை வீட்டில் குடியிருப்பதனால் மாணவிக்கு வவுனியாவில் காணி வழங்கி வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அபிவிருத்தி குழுத்தலைவர் தர்மபால செனவிரட்ன இதன்போது வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன் மாணவியின் சாதனை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.