இடஒதுக்கீடு விவகாரம்-இரயிலை மறித்து, கற்களை வீசி தாக்கிய பா. ம. க. தொண்டர்கள்

பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ள இடஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள தொண்டர்கள், பெருங்களத்தூரில் இரயிலை மறித்து, கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சமுதாயத்துக்குமான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

 இது குறித்து மருத்துவர் ராமதாஸ்  கருத்து தெரிவிக்கையில், “போராட்டம் என்பது நமக்கு லட்டு தின்பதைப் போன்றது. 1987-ம் ஆண்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஒரு வாரத்திற்கு தொடர் சாலைமறியல் என்ற மிகக்கடுமையான போராட்டத்தை நடத்தினோம். இப்போது அதைவிட மிகக்கடுமையான போராட்டங்களை நடத்த தயாராக இருக்கிறோம் என்று இந்தக் கால இளைஞர்கள் எனக்கு சவால் விடும் வகையில் கூறுகின்றனர்.

வன்னியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை கண்டு இன்றைய இளைஞர்கள் கொதித்துபோய் இருக்கிறார்கள். அய்யாவையே ஏமாற்றுகிறார்களா என்று ஆவேசமடைந்துள்ளனர். அவர்களை திரட்டிதான் மிகப்பெரிய போராட்டத்தை நாம் நடத்த இருக்கிறோம். குஜராத் மாநிலத்தில் படேல் சமுதாயத்தினர் போராட்டம் நடத்தியது போன்று, குஜ்ஜார் சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தியது போன்று நமது போராட்டமும் மிகக் கடுமையாக இருக்கும்.

IMG 20201201 104848 இடஒதுக்கீடு விவகாரம்-இரயிலை மறித்து, கற்களை வீசி தாக்கிய பா. ம. க. தொண்டர்கள்

நாம் போராட தொடங்கிய 4 நாட்களில் நமது கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அரசு அறிவிக்க வேண்டும். அந்த அளவுக்கு நமது போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும். இது தொடர்பாக எந்த விளைவுகள் ஏற்பட்டாலும் அதை சந்திக்க நாம் தயாராக உள்ளோம்” என்றார்.

மேலும் இந்த போராட்டம் டிசம்பர் 1-ம் திகதி தொடங்கி ஜனவரி வரை தொடரும் என பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இடஒதுக்கீடு போராட்டத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ”1987-ம் ஆண்டு நாம் நடத்திய ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் உலகஅளவில் கவனம் ஈர்த்தது. அதற்காக நாம் மேற்கொண்ட முன்னேற்பாடுகள் ஏராளமானவை. இப்போது ஒரு சில வாரங்களிலேயே அதைவிட கூடுதலான எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். அதற்கு காரணம் நாம் முன்வைத்துள்ள கோரிக்கையில் உள்ள நியாயம்தான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இட ஒதுக்கீடு போராட்டத்தி கலந்துகொள்ள வெளியூர்களிலிருந்து வரும் பாமகவினரை சென்னை பெருநகர எல்லையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பெருங்களத்தூரில் காவல்துறையினரால் தடுத்த நிறுத்தப்பட்ட பாமக தொண்டர்கள் ஆத்திரத்தில் இரயிலை மறித்து கற்களை வீசி தாக்கியுள்ளனர்.