ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை- முன்னாள் காவலர் குற்றவாளி என தீர்ப்பு

ஆப்ரிக்க – அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மின்னியாபோலிஸ் நகரத்தில் கைது செய்ய்யப்பட்டபோது உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி குற்றவாளி என்று   வழக்கு விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைது செய்யப்பட்ட போது,   முன்னாள் காவல் அதிகாரி டெரெக் சாவின், ஃப்ளாய்டின் கழுத்தில் ஒன்பது நிமிடங்களுக்கும் மேல் முழங்காலை வைத்து அழுத்தியது இருந்தமை குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தைப் பெற்றது.

இந்தக் காணொளி இனவெறிக்கு எதிராகவும் காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராகவும் உலகம் முழுவதும் போராட்டங்களைத் தூண்டியது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் இரண்டாம் நிலை கொலை, மூன்றாம் நிலை கொலை குற்றம் மற்றும் மனிதக் கொலை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் டெரெக் சாவின் குற்றவாளி என்று  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

டெரெக் சாவின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்பு நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்ட் குடும்பத்தினருடன் பேசிய அதிபர் பைடன், “குறைந்தபட்சம் இப்போது கொஞ்சம் நீதி கிடைத்துள்ளது. நாங்கள் இன்னும் நிறைய செய்ய உள்ளோம். அமைப்பு ரீதியான இனவெறியைக் கையாள்வதில் இது முதல் அடியாக இருக்கும்,”என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரம் அமெரிக்காவில் காவல்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ஜார்ஜ் ஃப்ளாய்ட் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.