அதிரடியான நகா்வுகள் அடுத்த வாரங்களில் – ஜனாதிபதியின் உரையை அடுத்து பரபரப்பாகியுள்ள அரசியல்

ஜனாதிபதியின் அறிவிப்புகளால் இலங்கை அரசியலில் எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தாவல்கள், அமைச்சரவை மறுசீரமைப்புகள், பதவி விலகல்கள், பேரம் பேசல்கள் போன்ற முக்கிய பல சம்பவங்கள் இடம்பெறலாம் என்றும், இதன்போது அரசியல் கட்சிகளும் முக்கியத் தீர்மானங்களை எடுக்கலாம் என்றும் ரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையை நிகழ்த்தி நாட்டின் பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்பில் பல்வேறு விடயங்களை அறிவித்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் அரசாங்கத்துடன் இணையும் முக்கியஸ்தர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கும் வகையில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறாலம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் கட்சித் தாவவுள்ளதாக தெரிவிக்கப்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தம்முடன் தக்க வைத்துக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்திக்குள் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால் கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பொதுஜன பெரமுனவினாலும் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், கட்சியின் குழுவொன்று எதிர்க்கட்சி பக்கம் செல்ல திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே ஜனாதிபதிக்கு மறைமுக ஆதரவை வழங்கி வந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அதனை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.