ரணிலை ஜனாதிபதி வேட்பாளராக அறிவியுங்கள்: பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆவேசமாக வலியுறுத்தினார்.

கம்பஹா , கடவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“கம்பஹா மக்கள் உங்கள் முடிவை ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர். நீங்கள் போட்டியிடும் விருப்பத்தை அறிவிப்பதில் தயவு செய்து இனியும் தாமதிக்க வேண்டாம்” என்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்ற சந்தேகங்களுக்கு மத்தியில் அவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பதிலளித்துள்ளனர்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா? அவ்வாறு போட்டியிட்டால் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவாரா அல்லது சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவாரா என்பது குறித்த எதுவித உத்தியோகப்பூர்வ தகவல்களும் அறிவிக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் திகதியை அறிவிப்பதற்கு சுமார் ஒரு வார காலமே காணப்படுகின்றது.