ரணிலுக்கு பசில் ஆதரவளிப்பதால் கூட்டணியில் பிளவு – நிமல் லான்சா குழுவினா் வெளியேறத் திட்டம்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கான வெற்றிக் கூட்டணியில் பசில் ராஜபக்ஷ இணைக்கப்பட்டமையால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ள அதேநேரம் வெற்றிக் கூட்டணியின் தலைமைப் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெறச் செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் வழிநடத்தல் குழுவில் பசில் ராஜபக்ஷ பங்குபற்றியதன் காரணமாக நிமல் லான்சா மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான புதிய
கூட்டணிக் குழு இதில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் வஜிர அபேவர்தனவின் யோசனைக்கு அமைய பசில் ராஜபக்ஷ இந்தக் குழுவிற்கு வந்துள்ளார். இந்த அழைப்புக்கு நிமல் லான்சா மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான புதிய கூட்டணிக் குழு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தினால் வெளியேறியதாக நிமல் லான்சா மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் இல்லாமலேயே, பசிலின் பங்கேற்புடன் இந்த சந்திப்பு இடம்பெற்றதுடன், ஜனாதிபதிக்கான பிரசாரத்தை ரணில் விக்ரமசிங்க செய்கின்றார் என்றால், பசில் ராஜபக்ஷ இருக்க வேண்டும் என வஜிர அபேவர்தன தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வஜிர அபேவர்தனவிடமிருந்து இவ்வாறானதொரு விடயம் வெளிப்பட்ட போது அந்தக் குழுவின் தலைவர் பதவியை பசிலுக்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அந்த பிரேரணையை மூலோபாய ரீதியில் நிராகரித்த பசில் ராஜபக்ஷ, நீங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு வருவீர்களாயின், அதனை நாட்டுக்கு தெரிவிப்பதாக திகதியை அறிவிக்குமாறும் கேட்டுள்ளார்.

இதேவேளை, அன்றைய தினம் ஜனாதிபதி வழங்கிய இராப்போசன விருந்தில் நிமல் லான்சாவின் முன்னணி குழுவினர் எவரும் கலந்து கொள்ளவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையிலேயே தங்களின் பலத்தை காட்டும் விதத்தில், எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் வகையில் புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு அரசாங்கத்தைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடிய கலந்துரையாடலொன்று ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

நிமல் லான்சா மற்றும் அனுர பிரியதர்சன யாப்பாவின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடலில் தற்போது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 20 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவாளர்களான அமைச்சர்களான நிமல் சிறிபால் சிறிபால டில்வா, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர, நளின் பெர்னாந்து ஆகியோருடன் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, சுரேஸ் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பாராளுமன்றத்தில் தற்போது உறுப்பினர்களாகவுள்ள நிமல் லான்சா, அனுர பிரியதர்சன யாப்பா, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை அக்டோபர் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எனவே தற்போது கலந்துரையாடப்படும் விடயங்கள் அனைத்தும் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இந்த கூட்டணி அமைய வேண்டுமெனவும் நாட்டை ஆளக்கூடிய வேட்பாளரை இந்த கூட்டணியே தெரிவு செய்ய வேண்டுமெனவும் இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் பிரசாரத்தை எதிர்வரும் 8 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் முன்னெடுப்பது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சுமார் 60 உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு செயற்படுவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.