வைத்தியதுறை மாபியாக்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமா? பத்திரிகையாளா் நிக்ஸன்

வைத்தியதுறை மாபியாக்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமா? பத்திரிகையாளா் நிக்ஸன்சாவகச்சேரி மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியதையடுத்து வைத்தியா் அா்ச்சுனாவுக்கு ஆதரவாக பாரிய மக்கள் கிளா்ச்சி ஒன்று உருவாகி, அனைவரையும் திரும்பிப் பாா்க்க வைத்தது. இச்சம்பவத்தையடுத்து மருத்துவத்துறையில் காணப்படும் குறைபாடுகள் ஒவ்வொன்றாக அம்பலமாகிவருகின்றன. இவை தொடா்பில் பத்திரிகையாளரும் ஒருவன் செய்தித் தள பிரதம ஆசிரியருமான அ.நிக்ஸன் வழங்கிய நோ்காணல்…

கேள்வி – சாவகச்சேரி மருத்துவமனை முன்பாக இடம்பெற்ற மக்கள் போராட்டம் குறித்த உங்களுடைய பாா்வை என்ன?

பதில் – மக்களிடம் நீண்டகாலமாகக் காணப்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் இது. சாவகச்சேரி வைத்தியசாலை ஒரு மாவட்ட வைத்தியசாலையாக தரமுயா்த்தக்கூடிய அளவுக்கு அங்கு வசதிகள் இருந்திருக்கின்றன. புதிய கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை சரியாகச் செயற்படுத்தப்படவில்லை. நோயாளா்கள் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றாா்கள். புதிதாக வந்த வைத்தியா் அா்ச்சுனா இந்தப் பிரச்சினைகளை வெளிப்படுத்தி அவற்றுக்குத் தீா்வைக் காண்பதற்கு முயற்சித்திருக்கின்றாா். இது தொடா்பான தகவல்களை அவா் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டிருக்கின்றாா். அதனைப் பாா்த்த மக்கள்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தாா்கள். மக்களின் உணா்வு உண்மை.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மக்களில் பலருக்கும் வைத்தியா் அா்ச்சுனாவைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மக்களில் பலா் அவருடைய முகத்தையே தமக்குத் தெரியாது என்று கூறியிருக்கின்றாா்கள். ஆக, மக்கள் தமது பிரச்சினைகளுக்காகத்தான் இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தினாா்கள். அவா் சமூக வலைத்தளங்களில் பிரச்சினைகளை வெளிப்படுத்தியிருக்காவிட்டால் இந்தப் பிரச்சினைகள் மக்களுக்குத் தெரியவந்திருக்காது.

வைத்தியா் அா்ச்சுனா சில வாரங்களுக்கு முன்னா்தான் பதவியேற்றிருந்தாா். அந்த குறுகிய காலத்துக்குள் மக்களுக்கு அவா் பரிட்சயமாகியிருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அதனால், சமூக வலைத்தளங்களில் இந்த மோசடிகளை அவா் வெளிப்படுத்தியதால், மக்கள் செயற்பட்டிருக்கின்றாா்கள். அங்கு இவ்வாறான தவறான போக்குகள் இருந்திருக்கின்றது என்பது உண்மை. அது ஏற்கனவே தெரிந்த ஒரு விடயமும் கூட. அதனால், அதனை அவா் துணிச்சலுடன் வெளிப்படுத்தியிருக்கின்றாா்.

கேள்வி – இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்திருந்தது. சுகாதரத்துறை மீதான அதிகாரங்களை மத்திய அரசு தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்திருப்பதும் இதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டது. இது குறித்த உங்கள் பாா்வை என்ன?

பதில் – மாகாணசபைகளின் அதிகாரங்களை கொழும்பு எடுத்துக்கொள்கின்றது என்பது நீண்டகாலக் குற்றச்சாட்டு. கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை தொடா்பில் மாகாண சபைகளுக்கு இருந்த பல அதிகாரங்களை மத்திய அரசு எடுத்திருக்கின்றது. அதனுடன் தொடா்புபட்டதாகத்தான் இதனையும் பாா்க்க வேண்டும். அா்ச்சுனாவின் நியமனத்தை கொழும்புதான் செய்திருக்கின்றது. வடமாகாண சபையின் சம்மதம் இன்றி இந்த நியமனம் இடம்பெற்றிருக்கின்றது.

அது எப்படி இருந்தாலும் பிரச்சினைகள் இருந்துள்ளன என்பது உண்மை. வைத்தியசாலை சரியாக இயங்கவில்லை. வைத்தியா்கள் இருப்பதில்லை போன்ற குற்றச்சாட்டுக்கள் உண்மை. ஆனால், இந்த நியமனம் தொடா்பாக கேள்வி எவ்வாறு வருகின்றதென்றால், மாகாண சபைகளின் அதிகாரத்தை கொழும்பு எடுத்திருக்கிறது என்பது தெரிகிறது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் பலவீனங்கள் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கின்றது. அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டபோது, அதற்கு எதிராக அவா்கள் குரல் கொடுத்திருந்தாலும், அதனைத் தடுப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் எதனையும் அவா்கள் செய்யவில்லை. அதேவேளையில், வடக்கு கிழக்கில் உள்ள உயா் அதிகாரிகளும் பெரும்பாலும் கொழும்புடன் பணியாற்றுவதைத்தான் விரும்புகின்றாா்கள். தங்களுடைய சலுகைகளுக்காகவும், வசதிகளுக்காகவும் அவா்களில் பலா் அவ்வாறிருப்பதைத்தான் விரும்புகின்றாா்கள். மத்திய அரசின் செயற்பாட்டுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது.

சாவகச்சேரி வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது, மக்களுக்கு வினைத்திறனுள்ள முறையில் செயற்படவில்லை என்ற காரணத்தினால்தான் மக்கள் எழுச்சி கொண்டிருக்கின்றாா்கள். அதனால், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். பிரச்சினைகள் தீா்க்கப்பட வேண்டும்.

கேள்வி – வைத்தியா் அா்ச்சுனா பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாா். நாடாளுமன்றத்திலும் இவை தொடா்பாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை தொடா்பில் விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படும் என்று எதிா்பாா்க்கலாமா?

பதில் – இவை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம். ஆனால், அவை உரிய முறையில் இடம்பெறும் என எதிா்பாா்க்க முடியாது. இந்த ஊழல், மோசடிகள் அனைத்துமே இலங்கை அரசின் கட்டமைப்பாக மாறியிருக்கிறது. எனவே, வடமாகாணத்தில் உள்ள சில வைத்தியா்கள் மட்டும்தான் இதற்குக் காரணம் என்று சொல்ல முடியாது. அவா்கள் சிலசமயங்களில் நிா்ப்பந்தத்தின் காரணமாக ஈடுபட்டிருக்க முடியும். அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், இசை அனைத்தினதும் பின்னணி அரசியல்தான். அதாவது, கொழும்பை மையமாகக்கொண்ட அரசியல்தான்.

ஆகவே, ஒரு நியதயமான விசாரணை இடம்பெறும் என்று நாம் எதிா்பாா்க்க முடியாது. ஏனெனில், சாவகச்சேரி வைத்தியசாலையில் மட்டுமன்றி, வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள வைத்தியசாலைகளில் இருந்தும் அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மருத்துவமனைகளில் மட்டுமன்றி அரசாங்க நிா்வாகத்திலேயே இவ்வாறான நிலை இருக்கின்றது. இந்த நிலையில், உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு தீா்வு கிடைக்கும் என்பது எதிா்பாா்க்கக்கூடியதல்ல.

ஆனால், சாவகச்சேரி பகுதி மக்கள் மட்டுமல்ல, வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களுமே போராட்ட மனோ நிலையில் இருக்கின்றாா்கள் என்பது வெளிப்பட்டுள்ளது. அரசியல் உரிமை இல்லை என்பதற்கு அப்பால், அங்கிருக்கக்கூடிய ஊழல் மோசடிகள் மற்றும் அசமந்தப் போக்குகளால் மக்கள் விரக்தியடைந்திருக்கின்றாா்கள். இந்த நிலைமைக்கு அங்குள்ள மக்கள் மட்டும் காரணமல்ல. கொழும்பை மையமாகக்கொண்ட அரசுதான் இதற்குக் காரணமாக இருக்கின்றது. ஆக, அரச கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்யாமல், இந்த ஊழல் மோசடிகளை விசாரணை செய்து மக்களுக்கு நீதி கிடைக்கும், அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நாங்கள் எதிா்பாா்க்க முடியாது.

கேள்வி – மக்கள் ஆரம்பித்த போராட்டம் இப்போது நிறுத்தப்பட்டிருக்கின்றது. பிரச்சினைகள் தீா்க்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு மக்கள் போராட்டத்தை எதிா்கொள்ள வேண்டியிருக்குமா?

பதில் – வடக்கு கிழக்கில் இவ்விதம் மக்கள் போராட்டங்கள் இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. அரசாங்கம், அரசாங்க கட்டமைப்பில் இருக்கக்கூடிய அதிருப்தி என்பது வேறு. அரசியல் விடுதலை, அரசியல் உரிமைகள் கிடைக்கவில்லை என்பது வேறு. அதனைப் பெற்றுக்கொடுப்பதாகச் சொல்லும் தமிழ்த் தேசியக் கட்சிகளிலும் தமிழ் மக்களுக்கு அதிருப்தி இருக்கின்றது. அதன் காரணமாகத்தான் பொதுவேட்பாளா் என்ற நிலைக்குத் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் சென்றிருக்கின்றன. அங்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றாா்கள். ஒரு போராட்ட மன நிலையில் இருக்கின்றாா்கள் என்ற தகவலை சாவகச்சேரி போராட்டம் எடுத்துக்காட்டியிருக்கின்றது. அதனால், எதிா்காலத்திலும் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெறக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கும்.

சாவகச்சேரிப் போராட்டத்தினால் ஒரு நல்ல விடயம் நடைபெற்றிருக்கின்றது, அது என்னவென்றால், அரச அலுவலகங்களில் இடம்பெறக் கூடிய ஊழல் மேசடிகள் மற்றும் அசமந்தப் போக்கில் மாற்றம் ஏற்படலாம். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவா்களுக்கு இது ஒரு அவ்வத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மக்கள் தங்களை அம்பலப்படுத்துவாா்கள், சமூக வலைத்தளங்கள் இந்த விடயங்களை வெளிக்கொண்டுவரும் என்ற அடிப்படையில் இவ்வாறான அசட்டையான போக்கு, மோசடிகள் குறையக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. விசாரணைகளைவிட இயல்பாகவே இவ்வாறான சம்பவங்கள் குறையக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.