அரசியலமைப்பை மீறி ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைக்க சதி – கடுமையாக சாடுகிறாா் சஜித்

ஜனாதிபதியும் அவரது அடிமைகளும் அரசியலமைப்பையும் மீறி ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்து வருகின்றனர். மாளிகைகளுக்குள் இருந்து கொண்டு சதிகள் மூலம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பின்னணி தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் அரசாங்கத்தின் சதி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை உரையாற்றும்போதே போதே இவ்வாறு குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில், “கடந்த காலங்களில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடிமைகளும், கையாட்களும், சகாக்களும் நாட்டுக்கு எதிர்மறையான செய்திகளை முன்வைத்து ஜனாதிபதி தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என்ற கருத்தை உருவாக்கினாா்கள்” என்று தெரிவித்தாா்.

“பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இது சரியான தருணம் அல்ல என மக்களை நம்பவைக்கும் வகையில் அரசியல் செயற்திட்டமொன்றை முன்னெடுக்க ஜனாதிபதியும் அவருக்கு நெருக்கமான குழுக்களும் முயற்சித்தனர். இவ்வாறான நிலையில் சட்ட ரீதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதி தேர்தலை பிற்போட மேலும் பல முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அரசியலமைப்பை மீறும் சதிகளாகும்” என்றும் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாஸ தெரிவித்தாா்.

தொடா்ந்தும் உரையாற்றிய எதிா்க்கட்சித் தலைவா், “செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையிலான காலப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாக கூறினாலும், அரசியலமைப்பு ரீதியாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாட்டு மக்களுக்கு இருக்கும் உரிமையை இல்லாதொழித்து, சீர்குலைக்க சில குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இந்நாட்டில் சர்வஜன வாக்குரிமையும் மக்களின் வாக்குரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று மேலும் தெரிவித்தாா்.