இந்தியாவில் கைதான நால்வா் குறித்து இலங்கையிலும் விசாரணை – போலி கடவுச் சீட்டில் சென்றதாக தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பபை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வர் குஜராத்திற்கு செல்ல முற்பட்ட வேளை அஹமதாபாத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த சந்தேக நபர்களின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் அவர்கள் உண்மையிலேயே ஐ.எஸ். சந்தேகநபர்களா என விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் இந்தியாவின் புலனாய்வுப் பிரிவினரிடம் இலங்கை புலனாய்வு பிரிவினர் மேலதிக தகவல்களை கோரியுள்ளதாக “டெய்லி மிரர்’ தெரிவித்துள்ளது.

இந்திய அதிகாரிகள் தகவல்களை வழங்கியதும் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளிற்கான அடுத்த கட்ட விசாரணைகள் ஆரம்பமாகும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரும் சில
நாட்களிற்கு முன்னர் கொழும்பிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து குஜராத் சென்றுள்ளனர்.

அவர்களிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றிருந்தவருக்காக காத்திருந்தவேளை இவர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அஹமதாபாத் விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் கையடக்க தொலைபேசிகளில் காணப்பட்ட மறை குறியாக்கப்பட்ட உரையாடல்கள் செய்திகளை பொலிஸார் மீட்டுள்ளனர் அவர்கள் இலக்கை நோக்கி செல்வதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை தீவிரமாக எடுத்துள்ளோம் சந்தேக நபர்கள் குறித்த மேலதிக தகவல்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் ஆகியோர் இந்த அறிக்கைகளை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், சந்தேகநபர்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதாகவும் தெரிவித்தனர்.

“எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்கள் இந்திய சகாக்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றி வருகிறோம்’ என்று அமைச்சர் அலஸ் கூறினார்.

குஜாராத் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்களை அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியானது. அகமதாபாத் விமான நிலையத்திற்கு இவர்கள் வந்த தற்கான துல்லியமான நோக்கம் தெளிவாக இல்லை. இந்த அச்சுறுத்தலை கையாள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கின்றோம் எனவும் அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 சந்தேக நபர்களை அம்மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நேற்று முன்தினம் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் துருவித் துருவி நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையைச் சேர்ந்த 1) முகமது பரீஸ், 2) முகமது நஃப்ரான், 3) முகமது ரசுதீன், 4) முகமது நுஸ்ரத் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த 4 பேரும் இந்தியாவில் லோக்சபா தேர்தலை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டி இருந்தனரா? இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் நாசவேலைகளை மேற்கொள்ள திட்டம் தீட்டி இருந்தனரா? என்பது தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் தொடர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைகளின் போது, இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு போலி கடவுச் சீட்டுக்கள் மூலம் வந்ததாகவும் இதற்காக 4 லட்சம் ரூபா கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டின் சென்னைக்கு வந்ததாகவும் சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு விமானம் மூலம் வந்ததாகவும் 4 பேரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குஜராத் மாநிலம் காந்திநகரின் புறநகர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தாங்கள் எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் பாகிஸ்தானில் இருந்து வரவேண்டிய கட்டளைக்காக காத்திருக்க தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் 4 பேரும் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர். இந்த 4 பேரிடமும் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.