புதுடில்லி வருமாறு சஜித்துக்கு இந்திய அரசு அழைப்பு – தோ்தல் அறிவிப்புக்கு முன்னா் பயணமாவாா்

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவை இந்தியாவுக்கு வருகை தருமாறு அந்த நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்னதாக இந்தியாவுக்கு வருமாறு சஜித் பிரேமதாஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இதனால், அவர் விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படு கின்றது.

ஜனாதிபதி ரணில் – சஜித் இணைவு தொடர்பில் இந்தியா அதிக கரிசனை கொண்டுள்ளது. இந்தநிலையில், சஜித் பிரேமதாஸவின் இந்தப் பயணத்தின்போது ரணில் விக்கிரமசிங்கவுடனான இணைந்து செயல்படுமாறு வலியுறுத்தப்படும் என்று நம்பப்படுகின்றது. இவர்களின் இணைவு குறித்து சிங்கப்பூரில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இதில், இந்தியாவுக்கும் பங்கு இருப்பதாக அப்போது பேசப்பட்டது. இந்த நிலையிலேயே இருவரின் இணைவு தொடர்பான இறுதி முயற்சியாகவே சஜித் பிரேமதாஸவுக்கு இந்தியா வருமாறு அழைக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு உயர் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.