தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அரசு தயாராகின்றது – அனுரகுமார

anura k தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய அரசு தயாராகின்றது - அனுரகுமாரதேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான 28 ஆயிரம் ஏக்கர் காணியை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், டெலிகாம் நிறுவனத்தை இந்தியா மற்றும் சீன நிறுவனங்கள் கோரியுள்ளதாகவும், இதற்கு தேவையான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும், வங்கிகள், எரிவாயு நிறுவனங்கள் மற்றும் இலங்கை காப்புறுதி நிறுவனம் ஆகிய தேசிய வளங்களும் இவ்வாறே தாரை வார்க்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதார மூலோபாய ரீதியில் முக்கியமான வளங்களான வங்கிகள் மற்றும் எரிவாயு நிறுவனங்களை விற்கவும் குத்தகை விடவும் அரசாங்கம் ஆவணங்களை தயாரித்து வருவதாகவும், அவற்றுள் லாபமீட்டும் நிறுவனங்களான டெலிகாம், காப்புறுதி நிறுவனம் மற்றும் எரிவாயு போன்ற நிறுவனங்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய வளங்களை விற்பதற்கான எந்த ஆணையையும் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கவில்லை. அத்துடன், இவற்றை கொள்ளை லாபத்திற்கு விற்பதற்கு அவர்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. மேலும், இவ்வருடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் ஒரு சூழ்நிலை இருக்கும் நிலையில் இவ்வாறு வளங்களை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்துகிறோம் எனவும் அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.