மட்டக்களப்பில் கனமழை; 5,461 குடும்பங்கள் பாதிப்பு!

1704851561 மட்டக்களப்பில் கனமழை; 5,461 குடும்பங்கள் பாதிப்பு!மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழையால் 5,461 குடும்பங்களை சேர்ந்த 17531பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வரை தொடர்ச்சியாக மூன்நாட்கள் கனமழை பெய்து வருகின்றது. இந்த மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல கிராமங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் மன்னம்பிட்டியில் பெருவெள்ளம் நிற்பதால் அந்த வீதி மூடப்பட்டுள்ளது. இதேபோன்று புலிபாய்ந்தகல், கிண்ணயடி, பிரம்படி தீவு பகுதிகளுக்கான வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், படகு போக்குவரத்து இடம்பெறுகின்றது. தவிர, செங்கலடியில் ஈரலக்குளம், மயிலவெட்டுவான், சித்தாண்டி முதல் பெருமாவெளி வரையான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை வரையான 24 மணி நேரத்தில் வாகனேரியில் 174 மி. மீ. மழைவீழ்ச்சி பதிவாகியது. இதே போன்று, மயிலாம்பாவெளியில் 130 மி.மீ., தும்பங்கேணி 112 மி. மீ., உருகாமம் 103.9 மி. மீ. உன்னிச்சை 102 மி. மீ. மட்டக்களப்பு 99.4 மி. மீ. கட்டுமுறிவுக்குளம் 98மி.மீ. மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன. கடும் மழையால் பலகுளங்கள் வான்பாய்கின்றன.

இதேவேளை, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் கன மழையால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.