ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்கும் சிறிலங்காவிடமும் அதன் ஆதரவு நாடுகளிடமுமே 15 ஆண்டுகளாகத் தீர்வு தேடும் விந்தை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 286

சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு நடைபெற்று 18.05. 2024 அன்று 15 வது ஆண்டு நிறைவு பெறுகிறது. சிறிலங்கா ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் அவர்களின் தமிழீழத் தாயகத்தில் அவர்களது தேசிய அரசாக அவர்களது தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் 31 ஆண்டுகாலம் நடைமுறையரசாக அமைந்திருந்த தமிழீழ அரசின் இறைமையை ஒடுக்குவதன் மூலம் ஈழத்தமிழர்களின் தாயகத்தைத் தான் ஆக்கிரமிப்பதற்காகவே இந்த முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பை அனைத்துலகச் சட்டங்களை மீறித் தனக்கு ஆதரவான இந்திய அமெரிக்க மேற்குலக நாடுகளின் ஆயுத வழங்கல் படைபலப் பயிற்சி தொழில்நுட்பத்துணை புலனாய்வுத்துணை மற்றும் கடன் மான்யம் போன்ற நிதித் துணைகளுடன் நடாத்தியது என்பது வரலாறு. அனைத்துலக நீதிக்கான நீதிமன்ற, அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளும் சிறிலங்காவை அனைத்துலகச் சட்டங்களுக்குள் கொண்டு வராதவாறு கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் சிறிலங்காவின் ஆதரவு நாடுகளே சிறிலங்காவுக்கு உதவுகின்றன என்பதும் சமகால வரலாறு. மேலும் இதே சிறிலங்காவின் ஆதரவு நாடுகளே சிறிலங்கா பாதுகாப்புச் செலவாக இந்நாடுகளிடமும் இந்நாடுகளின் அனுசரணையுடன் தனியாரிடமும் கூடவே சீனாவிடமும் பெற்ற கடன்களால் அடைந்த பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்தும் சிறிலங்கா பிணைபெற உதவுகின்றன. இந்நிலையில் சிறிலங்காவிடமும் அதன் ஆதரவு நாடுகளிடமும் கடந்த பதினைந்து ஆண்டுகளாகக் கெஞ்சியும் கொஞ்சியும் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு பெறலாம் என்றும் சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கு அதனைச் செய்தவர்களுக்குத் தண்டனை நீதியோ பாதிப்புற்றவர்களுக்குப் பரிகார நீதியோ பெறலாம் எனவும் தாயக புலத்து அரசியல்வாதிகள் முயற்சிப்பதைப் பார்க்கையில் பரிதாபமாகவுள்ளது.
மேலும் சிறிலங்கா தன்னுடைய ஆக்கிரமிப்பில் இருந்து தங்களின் இறைமையை மீள்விப்பதற்கு ஈழத்தமிழர்கள் நடாத்தி வரும் தேசிய விடுதலைப் போராட்டத்தை பிரிவினை என்று திரிபுவாதம் செய்து தனது ஈழத்தமிழின அழிப்பைத் தேசிய பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்குமான யுத்தம் என்று நியாயப்படுத்தி வருகிறது. அவ்வாறே ஈழத்தமிழர்கள் தங்களுடைய உயிரையும் உடமைகளையும் வாழ்வாதாரங்களையும் இனஅழிப்புச் செய்த உட்கட்டுமான அழிப்புச் செய்த சிறிலங்காவுக்கு எதிராக வெளிப்படுத்திய பாதுகாப்புக்கான ஆயுதப்போராட்டத்தை பயங்கரவாதம் எனத் தனது ஆதரவு நாடுகளின் துணையுடன் இன்று வரை சாதித்து வருகிறது. இதுவே தனது நிலைப்பாடு என்பதை உறுதி செய்யும் வகையில் இன்று சிறிலங்காப் பாராளுமன்றத்தில் பயங்கரவாதம் காரணமாக 1983 முதல் 2009 வரை இடம்பெற்ற போர் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் சர்வதேச தலையீடுகள் இல்லாத பொறுப்புக் கூறலை மேற்கொள்வதற்காகவும் சிறிலங்கா பொறுப்புக் கூறல் இனநல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கான நல்லிணக்கச் செயலணிச் சட்டமூல வரைபைச் சிறிலங்கா சமர்ப்பித்துள்ளது. இங்கு “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற சொல்லாட்சியைச் சட்டமாக்குவதன் மூலம் 1948 முதல் இன்று வரை சிறிலங்கா ஈழத்தமிழர்கள் மேல் நடாத்திக் கொண்டிருக்கும் “மக்கள் மேலான போரையும்” அனைத்து ஈழத்தமிழின அழிப்பு ஈழத்தமிழினத்துடைப்பு ஈழத்தமிழின பண்பாட்டு இனஅழிப்பு என்பனவற்றையும் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்குமான தேசிய பாதுகாப்புச் செயற்பாடுகள் என சட்டத்தகுதி வழங்க முற்பட்டுள்ளது. அதே வேளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கி வரும் ரணில் நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தின் வழி ஊடகச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தத் தொடங்கி விட்டார். இச்சூழ்நிலையில் அக்டோபர் 16க்குள் தேர்தல் என்று சனநாயக பூமியாகச் சிறிலங்காவைக் காட்டவும் தொடங்கியுள்ளார். புறக்கணிக்கப்பட வேண்டிய இந்த சனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நியமித்து புதுமையான குடியொப்பமொன்றை நடாத்த ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் எந்த வகையில் பங்கேற்றாலும் அது ஈழத்தமிழரின் இறைமை இழப்பு என்பது ஏனோ தெரியவில்லை. அவ்வாறே தந்தை செல்வநாயகம் 1975 இல் செய்த தன்னாட்சி உரிமைப்பிரகடனத்தைத் ஈழத்தமிழ் அரசியல்வாதிகளே மறந்து அவர் கொள்கை தங்கள் வழிதான் என திரிபுவாதம் செய்வதையும் கண்டு இரசிக்கும் நிலையில் ஈழத்தமிழர்கள்.
மேலும் அன்று போலவே இன்றும் ஈழத்தமிழின அழிப்பைச் சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கான கருவியாகவே கொண்டு செயற்பட்டு வருகிறது என்பதைச் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்ட அமைப்பினர் வெளியிட்டுள்ள பாதுகாப்புப் படையினர் தமிழ் இளையவர்களைக் கடத்திச் சென்று வலிந்து காணாமலாக்கல், சித்திரவதைகளுக்கு உள்ளாக்குதல், பாலியல் வன்முறைகளுக்குள்ளாக்குதல் 2015 முதல் 2023 என்னும் புதிய அறிக்கை நிரூபித்துள்ளது. 139 சம்பவங்களை சாட்சியப்படுத்தியுள்ள இவ்வறிக்கை பாதிக்கப்பட்டவர்களில் 65 பேர் சொந்த வீடுகளில் அல்லது உறவினர்களின் வீடுகளில் இருந்து சட்ட அமுலாக்க அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள், மற்றையவர்கள் வீட்டுக்கு அல்லது வேலைக்குச் சென்று கொண்டிருக்கையில் பிடித்துச் செல்லபட்டவர்கள் என்பதையும் எடுத்துரைத்துள்ளது. இவர்களில் 130 பேர் கடுஞ்சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது இவ்வமைப்பு தங்களுக்கு சாட்சியங்கள் தர இயலாத நிலையில் உள்ள பாதிப்புற்றுள்ளவர்களின் நிலைகளையும் கவனத்தில் எடுப்பின் பாதிப்புற்றவர்கள் மிக மிக அதிகமாகவே உள்ளனர் என்பதையும் விளக்கி இவை பரந்து பட்ட குற்றச் செயல்களாக முறைப்படுத்தப்பட்டே நடைபெறுகின்றன என்பதைத் தெளிவாக்கியுள்ளது. அத்துடன் யுத்தம் முடிந்த காலத்தில் பாதுகாப்புப் படைகளால் பின்பற்றப்பட்ட அதே முறைமைகள் இன்று வரை தொடர்கின்றன என்பதையும் வெளிப்படுத்திய இவ்வறிக்கை தமது குற்றங்களுக்குரிய பின்விளைவுகள் எதனையும் எதிர்கொள்ளாமல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதே தண்டனை விலக்கு என்று வரையறை செய்தல் சிறிலங்காவின் அரசியலமைப்பு மற்றும் அரசியல் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளமையே பாதுகாப்புப் படையினரால் செய்யப்படும் சர்வதேசக் குற்றங்களுக்கு பல தசாப்தங்களாகப் பொறுப்புக் கூறல் இல்லாதிருப்பதற்கான காரணம் என்பதையும் தெரியப்படுத்தியுள்ளது.
இதற்கிடை சிறிலங்காவின் உள்ளக பொறிமுறை வழியாகவோ அல்லது சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறையிலோ மட்டுமல்ல தேசிய மக்கள் சக்தியின் வழியிலும் கூட ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்பதை அநுரகுமர திசநாயக்கா கடந்த வாரத்தில் தன்னைச் சந்தித்த யப்பான், தென்ஆபிரிக்கா, சுவிஸ்லாந்து தூதுவர்கள் குழுவிடம் “தேசியப் பிரச்சினையாக இனப்பிரச்சினைக்குத் தங்களால் தீர்வு காண இயலாது மற்றவற்றுடன் இணைந்த வழியிலேயே தீர்வு” என்ற கூற்றால் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு சிங்களமயமாக்கப்படுகிறது. கொக்குத் தொடுவாய்க்கிராமம் போன்ற மூன்று கிராமங்களையும் ஆறு கிராமசேவகர் பிரிவுகளையும் கொண்ட வளமான பகுதிகள் முதல் மதுரமடு, தண்ணிமுறிப்பு, ஆமையன் குளம் போன்ற மானாவாரிக் காணிகள் வரை அனைத்தையுமே சிறிலங்கா சிங்களவர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கிறது. இனியாவது தமிழ் அரசியல் வாதிகளே மௌனத்தைக் கலைத்து மக்களுக்காகப் பேசுங்கள் என்று தங்கம்மா என்ற பாதிப்புற்ற தாயொருவர் ஊடகங்களிடம் நெஞ்சத்து வேதனையுடன் இவ்வாரத்தில் குமுறியுள்ளார். மக்களின் குரலாக ஒலியுங்கள் என்ற தாயக ஈழத் தமிழ் அரசியல்வாதிகளுக்கான இலக்கின் அழைப்பு இன்று ஈழத்தமிழ் மக்களின் இதயக்குமுறலாகி வருவதைக் காண்கின்றோம். இனி வரும் 16வது ஆண்டிலாவது மக்கள் இறைமையை முதன்மைப்படுத்தித் தாயக தேசிய தன்னாட்சியை மீள்விக்க தாயக புலத்து ஈழத்தமிழர் இணைந்திட இலக்கு வேண்டி நிற்கிறது.

Tamil News