படித்தோர் குழாத்து சனநாயகத்தால் இறைமை இழப்படையும் ஈழத்தமிழர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 289

இலங்கைத் தீவில் பொதுவாகவும் ஈழத்தில் சிறப்பாகவும் இறைமை இழப்புக்குப் பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய படித்தோர் குழாத்து சனநாயக முறைமை மூலகாரணமாக உள்ளதா?
இலங்கைத் தீவில் முதன் முறையாக 1910 இல் மட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் மூலமே இலங்கையர்க்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்த தேர்தல் நடாத்தப்பட்டது. ஆங்கிலம் படித்த சொத்துடைமையுள்ளவர்களுக்கு வாக்குரிமை என்ற அடிப்படையிலேயே இந்தத் தேர்தல் நடாத்தப் பெற்றது. இந்தத் தேர்தலில்தான் சேர். பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையர் முழுவதற்குமான பிரதிநிதியாகத் தெரிவானார்.
இந்தப் படித்தோர் குழாம் தமிழரிலும் சிங்களவரிலும் முஸ்லீம்களிலும் இந்தியத் தமிழரிலும் இருந்து கொழும்பை நோக்கி நகர்ந்து குடியேறிய நாள் முதல் இன்று வரை கொழும்பு அரசியல் என்பது இலங்கையின் சாதாரண குடிமக்களின் அரசியல் விருப்புக்களில் இருந்து மாறுபட்டதாக வேறுபட்டதாகவே உள்ளது.
தேசியங்களை பேசுவார்கள் ஆனால் தேசியங்களின் வளர்ச்சிக்கு வாழ்வை அர்ப்பணித்து உழைக்க மாட்டார்கள். மொழி, மத, சாதிய, பிரதேச வேறுபாடுகளை வளர்ப்பதன் மூலம் சாதாரண மக்களிடை ஒற்றுமையீனத்தை வளர்த்து, ஒன்றுபட்ட மக்கள் சக்தி மக்கள் போராட்டங்களாக மாறித் தங்களின் அரசியல் மேலாண்மை இருப்பை மாற்றுவதை தடுத்து நிறுத்துவதில் இவர்கள் வல்லுநர்கள். 1949 நவம்பரில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் குடியுரிமைப் பறிப்பு நாட்டின் பொருளாதார மசோதாவாகவே ஜே ஆர் ஜயவர்த்தனாவால் கொண்டுவரப்பட்டது. 1956 யூன் 5இல் எஸ் டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்காவால் சிங்களம் மட்டும் சட்டம் ஆங்கிலக்கல்வி முறைக்கு மாற்றீடாக ஏழை மக்களுக்குச் சொந்த மொழிக் கல்வியை அளிக்கும் மக்கள் நலத்திட்டமாகவே முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறே 1965 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்வி அமைச்சர் ஐ. எம். ஆர் ஏ இரியக்கொலை பல்கலைக்கழகத் தரப்படுத்தலைக் கொண்டு வந்த போதும் எல்லாருக்குமான வாய்ப்பளித்தல் என்றே பேசப்பட்டது.
உண்மையில் கடந்த 114 ஆண்டுகளாக இலங்கைத் தீவில் தொடரும் இந்த படித்தோர் குழாத்து அரசியலுக்கு மண்ணைக்காத்தல் மக்களைக் காத்தல் என்பதை விடக் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கேற்றல், பிராந்திய உலக வல்லாண்மைகளுக்கு மக்களின் மனிதவலுவையும் நாட்டின் மூலவளங்களையும் சேவைகள் ஏற்றுமதியாகவும் பொருட்கள் ஏற்றுமதியாகவும் மாற்றி நிதியாக்கம் செய்தல் என்பவற்றிலேயே அக்கறையும் ஆர்வமும் அதிகம்.
இன்றும் சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் திட்டங்கள் எல்லாமே இந்த படித்தோர் குழாத்து சனநாயக அரசியலின் உதாரணங்களாகவே உள்ளன. இதனைக் கடந்த வாரத்தில் கொழும்பில் நிகழ்ந்த முனைவர் தயான் ஜயதிலக்கவின் ‘தலையீடுகள் – தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்’ (Interventions. Selected Political Writings) நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிங்களப் புத்திஜீவிகள் கொள்கை வகுப்பாளர்கள் கருத்துருவாக்கிகள் பேராசிரியர்களிடையான உரையாடல்களில் காணக்கூடியதாக இருந்தது.
தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா ‘சிங்களப் பெரும்பான்மையினரை மையப்படுத்தியே சிங்கள அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கிறது – இதன் காரணமாக வடக்கு கிழக்கு மக்களின் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டு வருவது தேசியப் பிரச்சனை – இலங்கையின் ஒருதலைபட்ச தீர்மானங்கள் சிங்கள மக்களிடை ஒற்றுமையை ஏற்படுத்த உதவினாலும் வடக்கு கிழக்கால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற தோற்றப்பாட்டையே கட்டியெழுப்பி உள்ளது’ என்ற கருத்தினை முன்வைத்தார். இங்கு ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினை அவர்களின் இறைமை குறித்தது என்ற நிலையை மாற்றி வடக்கு கிழக்குப் பிரதிநிதிகளின் புறக்கணிப்பு என்ற கருத்துருவாக்கம் அமைகிறது.
இந்து சமுத்திரம் – அமெரிக்க பிரித்தானிய செல்வாக்கு நாடுகளுக்கு கடற்பயண ஒழுங்குகளுக்கும் – யப்பான் தென்கொரியாவுக்கு தங்கள் கடல்சார் ஆர்வங்களுக்கும்-அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் எல்லைதாண்டலைத் தடுப்பதற்கு எல்லைப் பாதுகாப்புக்கும்-சீனாவுக்கு ஆய்வுகள் கடற்போக்குவரத்து தேவைகளுக்கும்-முக்கியத்துவம் பெறுகிறது என்ற முனைவர் சரத் அமுனுகம-இதனை சரியான முறையில் சிறிலங்கா பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார். ஆனால் இந்து சமுத்திரத்தில் இலங்கைத் தீவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய ஈழத்தமிழர்களின் மேல் இந்துசமுத்திரத்தை அனைத்துலக நாடுகளுடைய போட்டிக்கு உட்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து எவருக்கும் அக்கறையில்லை.
குளோபல் சவுத் என்னும் தெற்கு உலகம் குறித்து அக்கறை காட்டும் ஜனாதிபதி சிறிலங்காவைக் குழுக்களாக வரைவுப்படுத்தப்படும் நிலையில பழகுவதில் இருந்து வெளிவந்து பரந்துபட்ட கூட்டாண்மையை வெளிப்படுத்தலுக்கு ஏற்ற முறையில் எல்லா நாடுகளையும் உள்வாங்கி தனது வெளிவிவகாரக் கொள்கைகளை வகுப்பதாக முனைவர் தயான் ஜயதிலக்க பாராட்டுத் தெரிவித்தார். இந்த சிங்களப் பேராசிரியர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கருத்துருவாக்கிகளும் தங்கள் சிங்கள நாடாகவே இலங்கைத் தீவைக் கருதி அதில் வாழும் வடக்கினதும் கிழக்கினதும் மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வைச் செய்து உலகநாடுகளிலும் உலக அமைப்புக்களிலும் ஈழத்தமிழர்க்குச் சாதகமாக வளர்ந்து வரும் புதிய நிலை ஈழத்தமிழர் இறைமையை அங்கீகரிக்கு முன்பு நாட்டின் வடக்கு கிழக்கு சமுதாயத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் ஈழத்தமிழர்களின் படித்தோர் குழாத்து சனநாயகத்தின் அரசியல்வாதிகளும் பேராசிரியர்களும் சிங்கள இறைமைக்குள் தீர்வு பெறப் பேசும் நிலையை மாற்றாவிட்டால் இவர்களே ஈழத்தமிழரின் இறைமை இழப்புக்கு காரணமாகிவிடுவார்கள் என்ற அச்சத்தை இலக்கு சுட்டிக்காட்ட முனைகிறது.

Tamil News