ஈழத்தமிழரின் இறைமைக்குரிய நிலத்தைக் கடலை வானை விற்றுப்பிழைக்க முயல்வதைத் தடுக்க பொதுவேட்பாளர் வழியாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 293

26.06.2024 அன்று பிரான்சின் தலைநகராகிய பாரிஸில் 2.5 பில்லியன் டொலர்களைச் சிறிலங்காவுக்குக் கடனாகக் கொடுத்த யப்பான், சிறிலங்காவின் 2022 ம் ஆண்டு வங்குரோத்து அறிவிப்புக்கு முன்னர் 450 மில்லியன் டொலர்களும் பின்னர் 3.8 பில்லியன் டொலர்களும் சிறிலங்காவுக்குக் கடன் கொடுத்துள்ள இந்தியா, 435 மில்லியன் டொலர்களைச் சிறிலங்காவுக்குக் கடனாகக் கொடுத்துள்ள பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத்தலைமையில், 435 மில்லியன் டொலர்களைக் கடனாகக் கொடுத்த கொரியாவுடன் 1.2 பில்லியன் டொலர்களைச் சிறிலங்காவுக்குக் கடனாகக் கொடுத்த, பதின்மூன்று நாடுகளான  அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா,  பெல்ஜியம், கனடா, டென்மார்க், யேர்மனி, ஹங்கேரி, நெதர்லாந்து,  ரஸ்யா, ஸ்பெயின், சுவீடன், பிரித்தானியா,  அமெரிக்கா ஆகிய நாடுகளும் சேர்ந்து சிறிலங்காவின் 5.9 பில்லியன் டொலர் கடனுக்கு கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. வேறுமொழியில் கூறுவதானால் சிறிலங்காவுக்குக் கடன் கொடுத்த மேலே காணப்படும் 17 நாடுகளுடன் சீனாவையும் சேர்ப்பின் 18 உலக நாடுகளுக்கும் சிறிலங்காவின் இறைமை எதோவொரு வகையில் நடைமுறையில் பகிரப்பட்டே கடன் பிடியில் இருந்து தப்பி வாழும் நிலை சிறிலங்காவுக்கு இன்றுள்ளது.
ஈழத்தமிழர்களின் இறைமையை ஒடுக்கக் கடன்வளர்த்த சிங்களத் தலைமைகள் இன்று ஈழத்தமிழர் தாயகத்தையும் சிங்களவர்களின் தாயகத்தையும் நடைமுறையில ஒருங்கே இழந்துவிட்ட அரசியல் எதார்த்தத்தில் வாழ்கின்றன. முக்கியமாக இந்த நாடுகள் எல்லாம் சிறிலங்காவுக்கு கடனில் இருந்து விடுபட உதவவில்லை. தாங்கள் கொடுத்த கடன்களை மீளப்பெறுவதற்கே வழி தேடுகின்றன. இலங்கைத்தீவின் வளத்தையும் இலங்கைத் தீவில் வாழ்கின்ற மக்களின் மனிதவலுவையும் தாங்கள் எவ்வாறு பயன்படுத்தி தாங்கள் கொடுத்த கடனை மீளப்பெறலாம் என்பதே இந்நாடுகளின் உள்நோக்கு. அது இயல்பானதும் கூட.  இந்திய வெளிவிவகார அமைச்சு “இந்தியா இணைத்தலைமை வகித்தமையின் ஊடாக சிறிலங்காவின் பொருளாதார உறுதிப்பாடு மீட்சி என்பவற்றுக்கு இந்தியா தனது தொடர்ச்சியான அரப்பணிப்பைச் செய்துள்ளது. அனைத்துலக நாணயநிதியத்துக்கு சிறிலங்கா தொடர்பில் உறுதிப்படுத்தலை வழங்கிய முதலாவது நாடு இந்தியா. அனைத்துலக நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதற்கு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை வழிவகுத்துள்ளது” என அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்துலக நாணய நிதியத்தின் இலங்கைக்கான உயர்தூதுக்குழுவின் முதன்மையாளர் பீட்டர் புரூவர் “பொருளாதார மீட்சிக்கான பயணத்தில் முக்கிய மைல் கல்லான கடன் உடன்படிக்கைகளை நிறைவு செய்தல், கடன் மறு சீரமைப்பு, கடன்நிலைத்தன்மையை மீள ஏற்படுத்தல் என்பவற்றுக்கு இது முக்கிய நடவடிக்கை” எனப்பாராட்டியுள்ளார் சுருக்கமாகச் சொன்னால் இந்தியாவோடு இணைந்து அமெரிக்காவும் அதன் மேற்குலக நாடுகளும், ரஸ்யா, கொரியா , யப்பான் போன்ற நாடுகளும் சிறிலங்காவுடன் இந்தக் கடன் மறுசீரமைப்பைச் செய்வதற்கு இந்தியா சிறிலங்காவுக்கு பக்கபலம் அளித்துள்ளது என்பது இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையால் உலகுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. அதே வேளை இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற மறுத்த சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனான சிறிலங்காவின் கடன் 4.2 பில்லியன் டொலர்களுக்கான  கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் 26.06. 2024 இல் கையெழுத்தாகியுள்ளது.
“சிறிலங்காவுக்கு நிதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவச் செல்வதற்கும் அனைத்துலக கடன் வழங்குனர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் முக்கிய காரணியாகக் காணப்பட்ட கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சிறிலங்காவுடன் தற்காலிகமாக உடன்பட்ட முதலாவது தரப்பு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி” என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். அத்துடன் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த மகிந்த ராஜபக்ச சீன கம்யூனிசக்கட்சியின் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகள் வெளியான 70வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காகச் சீனா அரசின் உத்தியோக பூர்வ அழைப்பில் நான்கு அதிகாரிகளுடன் கடந்த வியாழக்கிழமை சீனாவுக்குப் பயணமானார்.
இவ்வாறு இந்தியாவும். சீனாவும் சிறிலங்காவுடனான தங்கள் கூட்டாண்மைப் போக்கினை கடன் மறுசீரமைப்பு விடயத்தில் கூடத் தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில்,  சிறிலங்காவின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடன் மறுசீரமைப்பு ஏற்பாடுகளைத் தனது ஆட்சிக்காலச் சாதனையாக 26.06. 2024 இல் நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்தி சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெறுவதே மக்களின் வெற்றி தான் தோற்றால் தான் தோற்க மாட்டார் நாட்டு மக்களே தோற்றுவிடுவர் என்ற மகத்தான செய்தியை வழங்கியுள்ளார். இது குறித்து சிறிலங்காவின் ‘த ஐலண்ட்’  ஆங்கில நாளிதழ் 27.06. 24 இல்  “கொண்டாடப்படும் கடன்” என பொருத்தமான ஆசிரிய தலையங்கத்தை எழுதியுள்ளது. தனியாரிடம் வர்த்தக மற்றும் பிணைமுறிக்கடன்களாக சிறிலங்கா பெற்ற 14.7 பில்லியன் டொலர்களுக்கான கடன் மறுசீரமைப்பு எதுவும் 2022 முதல் இன்றுவரை செய்யப்படவில்லை. அவ்வாறே பல்தரப்புக் கடன்களாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் 6 பில்லியன் டொலர்களும் உலக வங்கியிடம் 4379 மில்லியன் டொலர்களும், அனைத்துலக நாணய நிதியத்திடம் 681 மில்லியன் டொலர்களும் பிற வங்கிகளிடம் 491 மில்லியன்களுமென கிட்டத்தட்ட 10.7 பில்லியன் கடன் பெறப்பட்டுள்ளது. குறித்த காலமுறைப்படி மீள்செலுத்தப்பட வேண்டிய இதற்கும் கடன் மறுசீரமைப்பு செய்ய முடியாது. இவற்றை உள்ளடக்கி பலதரப்பட்ட தகவல்கள் தரவுகளுடன் வீரசேகரி தமிழ் நாளிதழில் 27.06.2024இல் றொபேர்ட் அன்ரனி எழுதிய பொருளாதார ஆய்வுக்கட்டுரைக்கு அவர்  “சர்வதேச நிதி உதவிக்கான மிக எளிதான பிரவேசம்” எனத் தலைப்பிட்டுள்ளது இந்த கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் ரணிலின் சர்வதேச நிதி உதவிக்கான மிக எளிதான பிரவேசத்துக்கே சிறிலங்காவுக்கு உதவும். இதனால்தான் முன்னர்  கடன் தள்ளுபடி வீதம் முதலில் 50 வீதமென எதிர்பார்க்கப்பட்டு பின்னர் 28 வீதமேயென்றாகி தொடர்ந்து அனைத்துலக நாணயநிதிய நடைமுறைகளில் 7 வீதமாகி இப்போது எதுவுமே அது குறித்துப்பேசப்படாத நிலையில் உடன்படிக்கைகள் செய்யப்பட்டுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியினர் திறனாய்வு செய்கின்றனர்.
அதே வேளை ரணிலின் அனைத்துலக நிதி உதவிக்கு  பிராந்திய மேலாண்மைகளும் உலக வல்லாண்மைகளும் தங்கள் சந்தை மற்றும் இராணுவ நலன்களுக்கு இலங்கைத் தீவைப் பயன்படுத்த அனுமதிப்பதே அவருக்கான ஒரே வழியாக உள்ளது. இதற்கு ரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழரின் தாயக நிலப்பரப்புக்களையும் கடல் வளத்தையும் வான்பரப்பையும் அனைத்துலக நாடுகளின் முதலீட்டாளர்களுக்கும் உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் விற்றுப் பிழைக்க முயற்சித்து அதற்கு வடக்கு கிழக்கின் பொருளாதார அபிவிருத்தியென்று பெயரிட்டு வருகிறார். இந்நிலையில்தான் ஈழத்தமிழர்கள் ஏமாளிகள் அல்ல எனக் காண்பிப்பதற்காகவே 41 ஈழத்தமிழர்களின் சிவில் அமைப்புக்கள் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி ஈழத்தமிழர்களுடைய தனித்துவத்தையும் தேவைகளின் வேறுபாட்டையும் அவற்றை உடன் நிறைவேற்ற வேண்டிய அவசியத்தையும் முன்வைக்க முயல்கின்றார்கள். இதனைச் சுமந்திரன் போன்றவர்கள் மக்களின் ஆணை பெற்ற அரசியல்வாதிகள் என்று தங்களுக்குத் தாங்களே மகுடம் சூட்டி மக்களின் இணைப்புத்தான் மக்களின் ஆணையாகிறது என்ற உண்மையை மறந்து சிவில் அமைப்புக்களுக்கு அரசியல் முடிவெடுக்க அனுமதியில்லையென்ற வகையில் ஒன்றுபடும் ஊரை மீளவும் இரண்டுபடுத்த முயல்கின்றனர். இவ்விடத்தில் மக்கள் இறைமை மக்களிடமே உள்ளது. அது தேர்தலில் வெளிப்படுத்தப்பட்டு அவர்களுக்கான பிரதிநிதிகளை அவர்கள் உருவாக்குகின்ற பொழுது அப்பிரதிநிதிகள் மக்களின் ஆணையை முன்னெடுக்கத் தவறுகையில் மக்களே சிவில் அமைப்புக்களை உருவாக்கி மக்களையும் மண்ணையும் பாதுகாக்க வேண்டி வரும் என்பதே இன்றைய உலகில் ஈழத்தமிழர்களிடை மட்டுமல்ல உலகின் பல மக்களிடையிலும் குடிசார் அமைப்புக்கள் எழுச்சியுறுவதன் காரணம் என்பதை இலக்கு தெளிவாக எடுத்துரைக்க விரும்புகிறது.

Tamil News