இவ்வார இலங்கை மற்றும் உலக நிகழ்வுகள் சில ஈழத்தமிழர் இறைமையைப் பாதுகாப்பதற்கான வழிகளைக் காட்டுகின்றன | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 296

அரசமைப்பின் 22வது திருத்தத்தை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் வரை வெளியிட வேண்டாம் என்ற நீதியமைச்சர் விஜயதாச ராசபக்சாவின் கோரிக்கையை நிராகரித்துச் சிறிலங்கா ஜனாதிபதி அதனை வர்த்தமானியில் யூலை 19ம் திகதி வெளியிட்டுள்ளார். அமைச்சரவையுடன் முரண்பாட்டுடனும் தனது நிறைவேற்று அதிகாரத்தில் சிறிலங்கா ஜனாதிபதி தான் நினைத்ததைச் செய்யும் சர்வாதிகாரியாகவே இன்று செயற்படுகின்றார். இந்தப் போக்கில் செயற்பட்டுத்தான் 1978 முதல் 1983க்கு இடையில் இவரின் கிட்டிய குடும்ப உறுப்பினரும் அரசியல் குருவுமான முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்த்தனா சர்வாதிகாரச் சட்டங்களான எதிர்க்கட்சியை செயற்படாதவாறு சிறிமாவோவின் குடியுரிமையைப் பறித்த சட்டம் ஈழத்தமிழரைக் கண்ட இடத்தில் சுடவும், சுட்ட இடத்தில் எரிக்கவும் படைகளுக்கு அதிகாரமளித்த 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டம், தன்னுடைய ஆட்சி நீடிப்பு என்பவற்றையெல்லாம் செய்து இறுதியில் தனது சர்வாதிகாரத்தைச் சிங்கள பௌத்த பற்றாகத் திசை திருப்ப 1983 யூலை ஈழத்தமிழின அழிப்பையும் நடாத்தினார் என்பது வரலாறு.
இன்றைய ஜனாதிபதியும் தனது தோல்விகள் உறுதியாகையில் மீளவும் ஈழத்தமிழின அழிப்பு முயற்சிகளால் சிங்கள பௌத்த பேரினவாத ஆதரவைத் தேடக் கூடிய அபாயம் உள்ளது என்பது இலக்கின் அச்சமாக உள்ளது. இதனால் ஈழத்தமிழர் தங்கள் இருப்பையும் இறைமையும் பாதுகாக்கக் கூடிய சட்டகமொன்றை ஏற்படுத்துவது மிக முக்கியம். கடந்த சனவரி மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு உலகிற்கு நல்லிணக்கத்துடன் உண்மை கண்டறியும் தனது முயற்சியென்று சிறிலங்கா ஜனாதிபதி செய்த பரப்புரையின் உண்மைத்தன்மையை, 2016-18க்கு இடையில் ரமணி முத்தெட்டுக்கம தலைமையிலான ஆலோசனை செயலணியால் தயாரிக்கப்பட்ட பழைய கோப்புதான் உத்தேச உண்மை ஒற்றுமை நல்லிணக்க ஆணைக்குழு சட்ட மூலவரைபு என்ற இன்றைய உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்காலச் செயலகத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி அசங்க குணவன்சாவின் கூற்று உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறுதான் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆரும் இந்தியாவின் பாதுகாப்புக்காகச் செய்து கொள்ளப்பட்ட இந்தோ சிறிலங்கா உடன்படிக்கையை இந்தியா சிறிலங்காவின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பேணும் காப்புச் சட்டமாகத் தனது நரித்தந்திர அரசியலால் மாற்றினார் என்பது வரலாறு. இவ்விடயத்தில் இந்தியா உட்பட்ட அனைத்த நாடுகளுடனும் ஈழத்தமிழர்கள் தங்கள் உரையாடலைத் தொடங்கினால்தான் இனியும் நாடுகள் தங்கள் நலன் சார்ந்து ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்தைச் செய்யாது பாதுகாக்கலாம் என்பது இலக்கின் எண்ணம்.
“எமது நிலப்பரப்பையோ அல்லது கடற்பரப்பையோ இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு அக்கறைகளுக்கு எதிரான விதத்தில் மூன்றாம் தரப்பொன்று பயன்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம். இருப்பினும் இந்தியா ‘பிரிக்ஸ்’ போன்ற சில பொதுக்கட்டமைப்புக்களில் சீனாவுடன் இணைந்து பணியாற்றுவது போல சிறிலங்காவும் அதன் பங்காளிகளுடன் இணைந்து செயலாற்ற விரும்புகிறது” எனச் சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி அனைத்துலக ஊடகமொன்றுக்கு இந்தியா குறித்த சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கையைத் தெளிவுபடுத்திச் செவ்வியளித்துள்ளார். இதன்வழி பாரத் சிறிலங்கா கூட்டாண்மையையும் சீனா அமெரிக்கா உட்பட்ட மற்றைய நாடுகளுடன் பங்காண்மையையும் உடையதாக தனித்துவமான இறைமையற்ற இறைமைப் பகிர்வு கொண்ட அரசாங்கமாக இன்றைய சிறிலங்கா அரசாங்கம் உள்ளது என்ற நடைமுறை அரசியலை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஈழத்தமிழர்களும் தங்களின் அறிவாற்றலை நிதிப்பலத்தை அனைத்துலக மக்களுடனும் நாடுகளுடனும் பகிர்ந்து கூட்டாண்மை பங்காண்மைகளை வளர்க்க வேண்டுமென்பது இலக்கின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதற்கிடையே கடந்த வாரத்தில் மௌனமான முறையில் ஈழத்தமிழரின் இறைமையை அறிவார்ந்த நிலையில் இல்லாமல் செய்யும் வகையில் சிறிலங்கா இந்திய உதவியுடன் பௌத்த புராணமரபாக உள்ள மகாவம்சத்தை உலக வரலாற்று ஆவணமாக கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ வின் பணிப்பாளர் ஒன்ரே அசோலே அவர்களால் யூலை 17ம் திகதி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வைத்து அதன் வேந்தர் பேராசிரியர் ஜி. எச். பீரிஸ் துணைவேந்தர் பேராசிரியர் எம். டீலமாவங்ச மற்றும் நூலகர் ஆர். மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் ‘உலக பாரம்பரிய சின்னமாகப்’ பிரகடனப்படுத்த வைத்ததின் மூலமாக மாற்றியுள்ளது. “மகாவம்சமானது இலங்கை வரலாறு குறித்து மாத்திரமின்றி உலக வரலாற்றின் பல முக்கிய தகவல்களை உள்ளடக்கிய கையெழுத்துப் பிரதி” என ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ வின் பணிப்பாளர் ஒன்ரே அசோலே பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தெரிவித்துள்ளமை மகாவம்சத்தின் சிங்கள பௌத்த பேரினவாத வெளிப்பாட்டுக்கு உலகப் பல்கலைக்கழக மட்ட ஏற்புடைமையை உறுதிப்படுத்தும் வரலாற்றுத் திரிபுவாதமாக மாறியுள்ளது. இந்தத் தவறுகள் நிகழ்வதற்கு ஈழத்தமிழர்கள் தங்கள் வரலாறு பண்பாடு பொருளாதாரம் தத்துவங்கள் குறித்த உயராய்வுக் கட்டமைப்பு ஒன்றை உலகில் ஏற்படுத்தாது காலத்தை விரயமாக்குவதே காரணமாகிறது என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
இந்த வரலாற்றுத் திரிபுவாத முயற்சிகள் வரிசையில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொழுது வடக்கு கிழக்கில் தமிழர்கள் தனக்கு வாக்களித்தமை தான் விடுதலைப்புலிகளிடம் இருந்து அவர்களை மீட்டமைக்கான நன்றிச் செயல் எனத் தெற்கில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கடந்த வாரத்தில் கூறியுள்ளமையும் அமைகிறது. இனஅழிப்பை நடாத்திய அதே சிங்களக் கட்சிகள் தான் இன்று ஈழத்தமிழர்களை தேர்தலில் வாக்களிக்கக் கோரி வருகின்றனர். ஈழத்தமிழர் தாயகத்தில் இன்று நிலை கொண்டுள்ள பெருந்தொகையான சிறிலங்காப்டையினரும், வாழும் ஈழத்தமிழர் அல்லாதவர்களும் ஈழத்தமிழர்களின் அரசியலுடன் முரண்பாடு உள்ளவர்களும் வாக்களித்தாலும் அது தமிழர் தாயகத்தில் ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் தேர்தலில் பங்குபற்றிய வீதமாகவே வெளிப்படுத்தப்படும். நாளை இன்று சரத் பொன்சேகா கூறியவாறே உலகுக்கு சிங்களர் கூறுவர். இதனைத் தவிர்ப்பதற்காகவே ஈழத்தமிழர்கள் சார்பில் அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தத் தேர்தலை ஏற்கவில்லையென்ற கொள்கைப் பிரகடனத்துடன் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் அவருக்கு அளிக்கப்படும் வாக்குகளையும் அளிக்கப்படாது விடப்படும் வாக்குகளையும் சேர்த்து கூட்டு மொத்தமாக ஈழத்தமிழர்கள் சிறிலங்கா அரசாங்கத்தை ஏற்கவில்லையென்று மக்களாணையை வெளிப்படுத்தலாம் என்ற முயற்சியில் 50க்கு மேற்பட்ட ஈழத்தமிழரின் குடிசார் அமைப்புக்கள் இறங்கியுள்ளன. இந்த மக்களாணை ஈழத்தமிழரின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும் ஈழத்தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையினைப் பயன்படுத்தி; தங்களுடைய தாயகத்தில் தங்களின் தேசியத்தைப் பேணி தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிப்பதற்கு உதவும் என்பது இவர்களின் நம்பிக்கை. ஈழத்தமிழர்கள் இதனைக் கவனத்தில் எடுத்து ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வது முக்கியம் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது.
இறுதியாக ஒரு நாடு அல்லது இனம் அபாயங்களை வன்முறைகளைச் சந்திக்கும் பொழுது அந்த நாட்டின் அல்லது இனத்தின் நட்பு நாடுகளுடன் அல்லது இனத்துவ உறவுகளுடன் இணைந்த பங்காண்மையுடன் கூடிய கூட்டாண்மையுடனாலேயே அதனை வெல்ல முடியும். இதுவே ஒக்ஸ்வேர்ட்டில் பிளனம் கோட்டையில் நிகழ்ந்த ஐரோப்பிய நாடுகளின் அரசியல் சமுதாயத்தின் 4வது மாநாடு தெளிவாக்கியது. 50 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த அமைப்பு உக்ரேன் மேலான படையெடுப்பை ரஸ்யா தொடங்கிய 2022 இல் ஐரோப்பிய அளவிலான பாதுகாப்புக்காகக் கட்டமைக்கப்பட்ட ஒன்று. ஈழத்தமிழரும் உலகத் தமிழராகப் பலநாடுகளில் உள்ள நிலையில் இத்தகைய ஒரு ஈழத் ஈழத்தமிழர் அரசியல் சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே இலக்கின் எண்ணமாகவுள்ளது.

Tamil News