அனைத்துலகத்துக்கு ஈழத்தமிழரின் இறைமையினதும் தேசியத்தினதும் வலிமையினை வெளிப்படுத்தும் தளமாகத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 297

சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 2024ம் ஆண்டுக்கான தேர்தல் செப்டெம்பர் 21 இல் நடைபெறுமென சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலை தங்கள் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்த எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதே இன்று தாயகத்திலும் புலத்திலும் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை விகிதாசாரப்பிரதிநிதித்துவம் என்னும் இரண்டையும் 1978ம் ஆண்டு சிறிலங்கா அரசியலமைப்பில் அறிமுகம் செய்த இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் குருவும் கிட்டிய குடும்ப உறுப்பினருமான முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்த்தனா, இவற்றைப் பயன்படுத்தியே ஈழத்தமிழர்களின் இறைமையை ஒடுக்கி அவர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பிரிவினையென்றும் அவர்களின் உயிரையும் உடமைகளையும் நாளாந்தவாழ்வையும் சிறிலங்காவின் இனஅழிப்பு அரசியலில் இருந்து பாதுகாக்கும் சனநாயகப் போராட்டங்கள் ஆயுத எதிர்ப்புப் போராட்டங்கள் அனைத்தையும் பயங்கரவாதம் எனவும் அரசியலமைப்பால் வரைவுபடுத்தி 1979ம் ஆண்டு முதல் இன்று வரை 45 ஆண்டுகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தாலும் மக்கள் மேலான யுத்தத்தாலும் ஈழத்தமிழினத்தைத் தேசமாகவே இனஅழிப்பு செய்யும் சிறிலங்காவின் அரசியலையும் 1983ம் ஆண்டின் 6வது அரசியலமைப்புத் திருத்தத்தால் ஈழத்தமிழர்கள் தாங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட இறைமையுடன் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் வாழ்வதை மறுத்து அவர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி குறித்த எந்த எண்ணத்தையோ சொல்லையோ செயலையோ பிரிவினையென்று தேசத்துரோகக் குற்றமாகவும் சட்ட ஆட்சியையும் உருவாக்கினார்.
இந்நிலையில் இன்று இந்த ஈழத்தமிழர்களை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களின் அரசியல் உரிமைக்கான எந்தச் செயற்பாட்டையும் இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு என்னும் மூவகைப்பட்ட அனைத்துலகக் குற்றச் செயல்களால் தடுத்து நிறுத்திக் கொண்டு அதனைச் சிறிலங்காவின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் தேசிய பாதுகாப்பு நடவடிக்கையென உலகுக்கு நியாயப்படுத்தி வரும் அரசியல் முறைமைக்கான அரசுத் தலைவர் தேர்தலாகத்தான் 2024 சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலும் வருகிறது. இந்நிலையில் பிராந்திய மேலாண்மையான இந்தியாவும் சிறிலங்காவின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதே தனது முதன்மை நோக்கு என்று முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு என ஆயுதமும் படைப்பயிற்சியும் இந்தியாவில் அளித்து ஊக்குவிக்கப்பட்ட ஈழத்தமிழர் தேசிய விடுதலைப்போராட்டத்தின் முதன்மை நோக்கான ஈழத்தமிழர்களின் தேசிய பாதுகாப்பு என்பதை உறுதிப்படுத்தும் தனது பொறுப்பை துறந்து 1987 சிறிலங்கா இந்திய உடன்படிக்கையின் பின் இன்று வரை செயற்படும் நிலையில் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் இந்தியாவின் சந்தை மற்றும் கூட்டாண்மை பங்காண்மை தேவைகள் கருதி ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினையை சிறிலங்காவின் இறைமைக்குட்பட்ட சமுகம் ஒன்றின் பிரச்சினை என்ற பார்வையில் அனைத்துலகச் சட்டங்களையும் அமைப்புக்களையும் நெறிப்படுத்துவதுடன் சிறிலங்காவுக்கான படைபலத்தை அதிகரிப்பதற்கான எல்லா செயற்பாடுகளையும் நிதி உதவிகளையும் இன்று வரை அளித்து வருகின்றன.
இதனால் இந்தியாவும் அமெரிக்காவும் மேற்குலகநாடுகளும் இன்றைய சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை சிறிலங்கா அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பலப்படுத்தும் சனநாயக வழியாகவே வரவேற்று சிறிலங்காவுக்கு அதனுடைய பாதுகாப்பை படைநிலையிலும் பணநிலையிலும் உறுதிப்படுத்த தாங்கள் வகுத்தளித்த அனைத்துலக நாணய நிதியம் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட்ட அனைத்துலக நிதிக்கட்டமைப்புக்கள் வழி உச்சக்கட்ட உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில் அதனைத் தாம் விரும்பியவாறு தொடர்ந்தும் முன்னெடுக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் இந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் தெரிவாக வேண்டுமென்று உறுதியாகச் செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிறிலங்காவுக்கு அதிக கடன் அளித்துள்ள நாடுகளான சீனாவும் இந்தியாவும் யப்பானும் தங்கள் கடனுதவியை இலங்கைத் தீவின் இயற்கை வளங்களையும் மனித வலுவையும் தங்களுடைய சந்தை மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு உச்சமாகப் பயன்படுத்தும் பொருளாதார முறைமைகளை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசுத் தலைமையைத் தொடர்ந்து பேணும் வகையில் இந்தச் சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்கின்றன.
மக்களால் பாராளுமன்ற உறுப்பினராகக் கூட தேர்ந்தெடுக்கப்படாது 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் விகிதாசாரப் பிரதிநிதித்துவப் பட்டியல் முறை மூலம் தேசிய பட்டியல் வழியாக நியமனம் பெற்று ஒரே ஒரு உறுப்பினராக மட்டும் இருந்து கொண்டு அதே வேளை முன்னாள் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராசபக்சாவை அரகலிய மக்கள் போராட்டத்தின் மூலம் சிங்கள மக்கள் வெளியேற்ற எடுத்த நடடிவடிக்கைகளில் மகிந்த-ராசபக்ச குடும்பத்தின் பாதுகாவலராகத் தன்னை முன்னிலைப்படுத்தி அனைத்துலக அனுசரணைகளை ராசபக்ச குடும்பத்துக்கு பெற்றுக் கொடுக்கும் முகவர் ஜனாதிபதியாக 2022 இல் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கா இரண்டு வருடங்களில் அதனை நிறைவேற்றிய போதிலும் சிங்கள மக்களால் கூட ஏற்றுக்கொள்ளப்படாத தலைவராக எந்தக் கட்சியாலும் தான் மிகநீண்டகாலம் அரசியல் நடாத்திய ஐக்கிய தேசியக் கட்சியாலும் கூடப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தனிவிருப்ப வேட்பாளாராக ஜனாதிபதி தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை சிங்கள மக்களிடையிலும் தலைமை வெற்றிடம் உள்ளதை உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தலைமை வெற்றிடம் வெளிப்பட்டு சிறிலங்காவுடன் கடள் மறு சீரமைப்புச் செய்துள்ள கடன் கொடுத்தவர்கள் அதனை மீளப்பெறுவதற்கு இடையில் மக்கள் ஆணை பெற்ற ஜனாதிபதியொருவரை நியமிக்க வேண்டும் என்ற தேவையே இன்றைய ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு. எவர் ஜனாதிபதியாக வந்தாலும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை ஒன்றிணைக்கும் பௌத்த மகாசங்கத்தினரின் நெறிப்படுத்தலில் அவர் ஈழத்தமிழின அழிப்பிலும் அனைத்துலக உதவிகளைப் பெறுவதிலும் பொதுத்தன்மையுடன் செயற்படுவார் என்பதால் யார் வந்தாலும் ஏதோ ஒருவகையில் ரணில் விக்கிரமசிங்காவின் அதிகாரக்கட்டமைப்பு மீளவும் உறுதி செய்யப்பட்டு சிறிலங்காவின் வங்குரோத்துப் பொருளாதாரம் அனைத்துலக உதவிகளால் நிலைபெறும் என்பது வெளிப்படையானவொன்று. இதனாலேயே மக்கள் தேசிய முன்னணியின் அநுரகுமர திசநாயக்கா முதன்மை நிலையிலும் தேசிய மக்கள் சத்தியின் சஜித் பிரேமதாசா அடுத்த நிலையிலும் மூன்றாவது நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க உள்ள நிலையிலும் உள்ளனர் என்ற கருத்துக் கணிப்பீடுகளுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டவாறு நடைபெறுகிறது. சிறீமாவோ பண்டாரநாயக்காவின் இடதுசாரிக் கூட்டணி மிகப் பலம்பொருந்திய நிலையில் 1977 தேர்தல் மூலமே ஜே. ஆர் ஜயவர்த்தனா மீளவும் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்து சிறிமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையைப் பறித்தும் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளை இந்தியாவுக்கு விரட்டியடித்தும் சிங்கள நாடு பௌத்த சட்டம் சிங்கள ஆட்சி என்ற தத்துவத்தின் மூலம் 12 ஆண்டுகள் ஆட்சி செய்து சிங்கள பௌத்த பேரினவாதத்தையும் மேற்குலகம் சார்ந்த அரசியலையும் மீளவும் உறுதிப்படுத்தியமை இன்று ரணில் விக்கிரமசிங்காவின் இந்தத் தேர்தல் அறிவிப்பை அனுமதித்தமைக்கான முன்னுதாரணமாக உள்ளது. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கா விடுதலைப்புலிகள் அமைப்பினை பிளவுபடுத்தும் தந்திரோபாயங்களைக் கையாண்டு சிங்களத் தலைமைக்கு மீளவும் வலிமை சேர்த்தது போலவே இன்று ராஜபக்சாக்களின் ஆதரவுடன் பின்பக்கக் கதவால் ஆட்சித்தலைமையை ஏற்று அவர்களுடைய கட்சியையே பிரித்துள்ளார் என்று நாமல் ராஜபக்சா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதே தந்திரோபாயத்தைத் தான் இந்தியக் கூட்டாண்மைக்கும் அமெரிக்கப் பங்காண்மைக்கும் சீன நட்பாண்மைக்கும் ரஸ்ய மத்திய கிழக்கு நாடுகள் உறவாண்மைகளுக்கும் எல்லாநாடுகளின் சிறிலங்காவுடனான தொடர்பாண்மைக்கும்; ஈழத்தமிழரின் தாயகத்தைச் சூழவுள்ள இந்துமாக்கடல் பகுதியிலும் நிலப்பகுதியிலும் ரணில் கையாண்டு நில இணைப்பு பொருளாதார இணைப்பு மீண்டெழு எரிசக்திகளின் இணைப்பு காலநிலைப் பாதுகாப்பு இணைப்பு எனப் பலவழிகளில் அனைத்துலக தளமாக இலங்கைத் தீவை மாற்றி அந்த அந்த நாடுகளின் மூலமான நன்மைகளைப் பெற்று ஈழத்தமிழர் மேலான மக்கள் மேலான யுத்தத்தை 1972 முதல் அரைநூற்றாண்டுக்கு மேலாக நடாத்தி ஏற்படுத்திய படுகடன்களால் ஏற்பட்ட வங்குரோத்து அரசியலில் இருந்து தப்பிக்கும் தற்காலிக பொருளாதாரச் செயற்பாட்டில் வெற்றி கண்டுள்ளார் என்பதே ரணிலின் அனைத்துலக அரசியல் குறித்த மதிப்பீடாக உள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தமது தாயகம் மேலான இறைமையின் உண்மையையும், தேசிய வலிமை பிராந்திய உலகப் பாதுகாப்புக்குக்கான அடிப்படைத் தேவையென்பதையும் தன்னாட்சி மூலமே அவர்களால் பிராந்திய உலக அமைதிக்கான பங்களிப்பைச் செய்ய இயலும் என்பதையும் இந்தத் தேர்தல் மேடையைப் பயன்படுத்தி பிராந்திய, உலகுக்கு தெளிவுபடுத்துவதே இந்தத் தேர்தலை ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் முறைமையாக வேண்டும் என்பதே இலக்கின் எண்ணம்.

Tamil News