Home Blog Page 1873

இரு பிள்ளைகளை கிணற்றில் வீசி கொன்ற கொடிய தந்தை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளை தந்தை ஒருவர் கிணற்றினுள் வீசி கொலை செய்த பரிதாப சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசிக்கும் அஸிமுல் ஹக் (வயது 10), அஸிமுல் தாஹியா (வயது 07) ஆகிய இரண்டு குழந்தைகளின் தந்தை இன்று நள்ளிரவு இரண்டு மணியளவில் தனது வீட்டு கிணற்றில் தூக்கி எறிந்ததில் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் பிள்ளைகளை கொழும்பு பிரதேசத்திலுள்ள காப்பகத்தில் சேர்த்து கல்வி கற்று வந்த நிலையில் கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்னர் பிள்ளைகளை வேறு பாடசாலைகளில் சேர்ப்பதற்காக இடைவிலகல் மேற்கொண்டு அழைத்து வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று நள்ளிரவு இரண்டு மணியளவில் பிள்ளைகளின் அழுகுரல் கேட்டு அயலவர்கள் ஓடி வந்து கிணற்றில் இருந்து பிள்ளைகளை மீட்கும் போது பிள்ளைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டு பின்னர் இரண்டு பிள்ளைகளின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளை கொலை செய்த நாற்பது வயதுடை தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

இரண்டு பிள்ளைகள் பரிதாபமான முறையில் மரணமடைந்துள்ளமையால் ஒட்டுமொத்தமாக மாவடிச்சேனை பகுதி பெரும் சோதகத்தில் ஆழ்ந்து காணப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

காவல் துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மிரிஹான காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அரசாங்கத்துக்கு, வெள்ளை அடிக்காமல் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் – மனோ

அரசாங்கம் அறிவித்த முதற்கட்ட வாழ்வாதார நிவாரண கொடுப்பனவு ரூ. 5,000 வழங்கப்படுவதில் கொழும்பு, கம்பஹா மாவட்ட மாநகர பிரதேசங்களில் வாழும் ஏழைகளும், வருமானம் இழந்த நடுத்தர வர்க்க மக்களும், அதேபோல் மலையக தோட்டப்புறங்களில் வாழும் மக்களும், கணிசமாக புறக்கணிக்கப்படுவதாக தகவல்கள், முறைபாடுகள், கண்டணங்கள் மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த வண்ணம் உள்ளன என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சமுர்தி பெறுவோர் மற்றும் சமுர்தி காத்திருப்போர் பட்டியல்களில் இருப்போர்-இல்லாதோர், வாடகை வீடுகளில், சொந்த வீடுகளில் இருப்போர்-இல்லாதோர் என்ற வேறுபாடுகளின்றி அனைவருக்கும் இந்த தொகை வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் கூற்று இன்று பொய்யாகி போயிருக்கிறது.

ஜனாதிபதியும், பிரதமரும் ஊடகங்களில் பேசுபவை நடைமுறையில் இல்லை. இது தொடர்பில் எதிர்க்கட்சி என்ற முறையில் எமது கண்டனத்தை தெரிவித்து, இதை நிவர்த்திக்க எம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம்.

அதேவேளை, “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது” என அரசாங்கத்துக்கு, வெள்ளை அடிக்காமல், வாழ்வாதார நிவாரண கொடுப்பனவு வழங்குவதில் இடம்பெறும் பாரபட்ச உண்மையை ஒப்புக்கொண்டு, அரசாங்கத்துடன் பேசி நமது மக்களுக்கு நியாயமான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்குமாறு, அரசாங்கத்தில் இருக்கின்ற தமிழ் அமைச்சர்களுக்கு கூறி வைக்க விரும்புகிறோம். இதற்கு நாமும் முழு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருக்கிறோம்.

இந்நிலையில், இன்று எம்முன் இருக்கும் முக்கிய பிரச்சினைகள் மூன்று என அடையாளம் கண்டுள்ளோம்.

முதலாவது;
கொரோனாவினால் அமுல்படுத்தப்படும், தொடர் ஊரடங்கினால், பெரிதும் பாதிக்கப்பட்டு, வாழ்வாதார நிவாரணம் வழங்குவதில் புறக்கணிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் வாழும், நகர ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் தொடர்பில் குரல் எழுப்பி அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பது,

அடுத்தது;
தொழில் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு வந்து, இப்போது தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு முடியாமல் சிக்கி நிற்கும் மக்களுக்கு உதவுவது, இப்போது 20ம் திகதிக்கு பின் அவர்கள் சொந்த ஊர் செல்ல மருத்துவ, போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது,

மூன்றாவது;
அரசாங்க வாழ்வாதார நிவாரணம் கொடுப்பனவில் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ள, மலையக தோட்டப்புற மக்கள் தொடர்பாக குரல் எழுப்பி அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பது,

கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை நெருங்குகின்றது

கோவிட்-19 வைரசின் தாக்கத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதேசமயம் நாடுகள் பொருளாதார இழப்புக்களையும் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், இதுவரையில் 119,212 பேர் பலியாகியுள்ளதுடன், 1,918,679 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 443,192 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:

அமெரிக்கா – 23,485

இந்தாலி – 20,465

ஸ்பெயின் – 17,628

பிரான்ஸ் – 14,967

பிரித்தானியா – 11,329

ஈரான் – 4,585

சீனா – 3,341

நெதர்லாந்து – 2,823

ஜேர்மனி – 3,118

பெல்ஜியம் – 3,903

பிரேசில் – 1,328

துருக்கி – 1,296

சுவிற்சலாந்து – 1,138

கனடா – 767

இந்தியா – 358

சுவீடன் – 919

இஸ்ரேல் – 116

உணவுப் பற்றாக்குறையை நீக்க வடக்கு கிழக்கை நம்பும் ஜனாதிபதி இராணுவத்தை களமிறக்க திட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக வடக்கு கிழக்கில் நெல் உற்பத்தியை மேம்படுத்த ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ விசேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளார்.

வடக்கு கிழக்கில் அதிக நெல் விளையும் பகுதிகளை கண்காணிக்க இராணுவத்தைப் பயன்படுத்தவும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக தேசிய விவசாய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

இதேவேளை மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாட்டில் உள்ள அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களின் சேவைகளை மீள் அறிவித்தல் வரை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மக்களின் நெல் உற்பத்தியின் அவசியத்தையும், களஞ்சியப்படுத்தலின் அவசியத்தையும் கருத்தில் கொண்டு அனைத்து நெல் ஆலைகளும் அத்தியாவசிய சேவையாக கருத்தில் கொண்டு திறக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எந்த மதத்தவராக இருந்தாலும் கொரோனாவால் இறந்தவர்கள் எரியூட்டப்பட வேண்டும் இலங்கை அரசு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களின் உடல்கள் கட்டாயமாக எரியூட்டப்பட வேண்டும் என்று இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை 800 முதல் 1,200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 45 நிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை எரியூட்டப்பட வேண்டும். அரசு ஒப்புதல் வழங்கியுள்ள மயானத்தில் அதிகாரியின் மேற்பார்வையில் அவை எரியூட்டப்பட வேண்டும்.

இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு மேற்கொள்ளும் உரிமை உள்ளவர்களைத் தவிர பிற எவரிடமும் உடல் ஒப்படைக்கப்பட மாட்டாது.

மயானத்தில் இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளையும், இறந்த நபரை எரியூட்டுவதற்குப் பயன்படுத்தும் பொருட்களையும் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியுடன் சேர்த்து எரியூட்டப்பட வேண்டும். திரும்பப் பயன்படுத்தும் வகையிலான பொருட்கள் முறையான சுத்தம் செய்யப்பட வேண்டும்.

எரியூட்டப்பட்டவரின் சாம்பரை அவருடைய இரத்த சொந்தம் கோரும் பட்சத்தில் வழங்கப்படும்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு மாற்றம் தொடர்பாக நாசா வெளியிட்டள்ள படம்

உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் வேளையில், உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் இயற்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சுற்றுச் சூழல் மாசு கணிசமானளவு குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.

வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகள் மூடல் ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகள் குறிப்பிடுகின்றது.

வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்தப் படம் காட்டுகின்றது.

எவ்வாறாயினும் இந்த செயற்கைக் கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது.

மே 11இல் பாடசாலை 2ஆம் தவணை ஆரம்பம்.

2020ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் மே 11ஆம் திகதி ஆரம்பமாகும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைக்கான 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஏற்கனவே திட்டமிடடதைப் போன்று ஏப்ரல் 20ஆம் திகதி ஆரம்பிக்க முடியாத காரணத்தினால் மே மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளுக்கான 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜுன் இறுதியில் பொதுத்தேர்தல்?!

நாடாளுமன்றத் தேர்தலை ஜுன் மாதத்தின் இறுதிப் பகுதியில் நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலித்து வருகின்றது என அரசியல் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பு மே மாதம் ஆரம்பத்தில் அறிவிக்கப்படின் தேர்தல் பரப்புரைக்கு 45 நாட்கள் வழங்கப்பட வேண்டும். அந்த நாட்களைக் கருத்தில்கொண்டு தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பகிரங்கமாக அறிவிப்பார் எனவும் கூறப்படுகின்றது.

வருடப்பிறப்பு சுப நேரங்கள்.

வருடப்பிறப்பு

மலரும் மங்களகரமான சார்வரி என்ற புதிய ஆண்டு (13.04.2020) திங்கட்கிழமை முன்னிரவு நாடி 33 விநாடி 20 அபரபக்க ஷஷ்டி திதியில் மூல நட்சத்திரத்தின் நான்காம் பாகத்தில் துலா லக்கினத்தில் வருடம் பிறக்கிறது.

விஷூ புண்ணிய காலம்

பிற்பகல் நாடி 23 விநாடி 20 (3.26 மணி) முதல் அன்று முன்னிரவு நாடி 43 விநாடி 20 (11.26 மணி) வரை விஷூ புண்ணிய காலமாகும்.

மருத்து நீர், ஆடை

இந்நேரத்தில் மருத்து நீர் வைத்து நீராடி வௌ்ளை நிறமுள்ள பட்டாடை ஆயினும் வௌ்ளைக் கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.

கைவிசேஷம்

16.04.2020 இரவு 10.37 – 12.23 வரை 17.04.2020 அதிகாலை 3.08 – 4.04 வரை 17.04.2020 அதிகாலை 4.16 – 5.47 வரை 20.04.2020 நண்பகல் 12.06 – 1.46 வரை

அனைவருக்கும் அத தெரண செய்திப்பிரிவு சார்ப்பில் மகிழ்ச்சி நிறைந்த சௌபாக்கியமான சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்…