Home Blog Page 1878

ஸ்ரீலங்காவில் மேலும் ஏழுபேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் 6 பேரும், தெஹிவளையில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுறுதியானோர் எண்ணிக்கை 197 ஆக அதரிகரித்துள்ளது.

20 ஆயிரம் பரிசோதனை உபகரணங்களை இலங்கைக்கு கொண்டுவர தீர்மானம்.

நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேடமருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுறுதியான மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தது மருத்துவமனையில் இருந்து நேற்றைய தினம் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், 7 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், தொற்றுறுதியான 129 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றுறுதியான முதலாவது இலங்கையர் கடந்த மாதம் 11 ஆம் திகதி முதன் முதலாக அடையாளம் காணப்பட்டார்.

கடந்த 31 ஆம் திகதி அதிகபட்சமாக 21 கொரோனா தொற்றுறதியானோர் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நிலையில், நாட்டின் 14 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பில் 44 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்தில், 34 பேரும், களுத்துறையில் 27 பேரும், கம்பஹாவில் 16 பேரும், யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் தலா 7 பேரும் கொரோனா தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரியில் 5 பேரும், குரநாகலில் 3 பேரும், மாத்தறையில் இரண்டு பேரும், மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும், தனிமைப்படுத்தல் மையங்களில் 37 பேரும், வெளிநாட்டவர்களு; மூவரும் இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், கொரோனா தொற்றை கண்டறிவதற்கான 20 ஆயிரத்து 64 பரிசோதனை உபகரணங்களுடன், விசேட பொருட்கள் சேவை வானூர்தி ஒன்று நேற்று சீனாவின் ஷங்காய் நகரிருலிந்து நாட்டை வந்தடைந்தது.

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள பீ.சீ.ஆர் எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றை உறுதிப்படுத்த கூடிய உபகரணங்களின் பெறுமதி ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த வாரம் மேலும் 20 ஆயிரம் பரிசோதனை உபகரணங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.

கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இலங்கையின் கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கொரோனா தொற்றுடையவர்கள், நாட்டுக்கு வருவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல்டி சில்வா தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் வடமேல் கடற்பரப்பு எல்லைகளில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்து கரையோர பகுதிகளில் உள்ள மீன்பிடி சங்கங்கள் மற்றும் பொறுப்புவாய்ந்தவர்கள் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தி, பாதுகாப்புடன் செயற்பட வேண்டும்.

அத்துடன், சந்தேகத்திற்குரிய நபர்கள் மற்றும் கப்பல்கள் அவதானிக்கப்படுமாயின், விரைவாக கடற்படையினருக்கு அறியப்படுத்துமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் பியல்டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச எல்லைகள் ஊடாக ஏதிலிகள் பிரவேசிப்பதை தவிர்ப்பதற்கான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு இந்திய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதாவது ஒரு வகையில், இவ்வாறு ஏதிலிகள் அடங்கிய கப்பல் கடற்பரப்பில் அவதானிக்கப்படுமாயின், அந்த கப்பல், பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே அதனை பாதுகாப்பான முறையில் அனுப்பிவைப்பதற்கு கடற்படையினால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கு மேல் உயர்ந்தது

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகில் உள்ள நாடுகள் அதிக உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருவது நாம் அறிந்ததே இந்த நிலையில், இதுவரையில் 100,371 பேர் பலியாகியுள்ளதுடன், 1,652,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 339,937 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரித்தானியா ஆகியவை அடங்கும்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 980 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் 605 பேர் பலியாகியுள்ளதுடன், இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 570 பேர் மரணித்துள்ளனர். அமெரிக்காவில் சராசரியாக 2000 பேர் நாள் ஒன்றிற்கு மரணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமேசான் பழங்குடி மக்களிடையே முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவுகை

பிரேசில் யானோமாமி என்னும் அமேசான் பழங்குடி மக்களிடையே முதல் முதலாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது. பொதுவாக வெளியுலகத் தொடர்பற்று வாழ்ந்துவரும் இவர்கள் வேறிடங்களில் இருந்து பரவும் நோய்களால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அறியப்படுகிறது.

நோயாளியான 15 வயது சிறுவன், வடக்கு மாநிலமான ரொரைமாவின் தலைநகரான போவா விஸ்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“யானோமாமி மக்களின் மத்தியில் ஒரு தொற்றை இன்று நாங்கள் உறுதிப்படுத்தினோம், இது ஒரு மிகவும் கவலைக்குரிய விடையம் .நாங்கள் பழங்குடி சமூகங்களுடன்,குறிப்பாக வெளி உலகத்துடன் மிகக் குறைந்த தொடர்பில் உள்ளவர்களுடன் மும்மடங்கு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.”என்று சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மண்டேட்டா புதன்கிழமை ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

குளோபோ என்ற செய்தித்தாள் படி, பிரேசில் பழங்குடி மக்களிடையே இப்போது குறைந்தது ஏழு கொரோனா வைரஸ் தொற்றுக்களை உறுதிப்படுத்தியுள்ளது.

முதலாவது கோகாமா இனத்தைச் சேர்ந்த 20 வயது பெண், ஒரு வாரத்திற்கு முன்பு காரோண வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரேசில் 300 க்கும் மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 800,000 பழங்குடியின மக்களைக் கொண்டுள்ளது.

முக வண்ணப்பூச்சு மற்றும் சிக்கலான துளையிடல்களுக்கு பெயர் பெற்ற யனோமாமி மக்கள் சுமார் 27,000 பெயர் உள்ளனர்.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வெளி உலகத்திலிருந்து பெரிதும் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் 1970 களில் அம்மை மற்றும் மலேரியா போன்ற நோய்களால் பேரழிவிற்கு ஆளானார்கள்.

அமேசான் மழைக்காடுகளில் உள்ள பழங்குடியினர் வெளியிலிருந்து பரவுகின்ற நோய்களால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் ஏனெனில், அவர்கள் வரலாற்று ரீதியாக நோய்க்கிருமிகளில் இருந்து விலகிவாழ்கின்றனர்.இதனால், உலகிலுள்ள பெரும்பாலான மக்களைப்போல் இவர்களிடம் மேம்பட்ட நோய்யெதிர்ப்புச் சக்தி காணப்படுவதில்லை.

மன்னார் தாரபுரத்தில் 8 பேர் மருத்துவ பரிசோதனைகளுக்கு..!

மன்னார் – தாராபுரம் பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு குடும்பங்கள் இன்று காலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் டீ.வினோதன் தலைமையில் இன்று காலை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்.

இதனடிப்படையில் 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் பகுதிக்கு அண்மையில் புத்தளத்திலிருந்து சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து தாராபுரம் பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தளத்தில் கொரோனா தொற்று உறுதியானவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இரண்டு குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்தநிலையில் குறித்த குடும்ப உறுப்பினர்களுக்;கு மருத்துவ பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் தாராபுரம் பகுதியில் கிருமி நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தி தொரடர்பாளர் குறிப்பிட்டார்.
தாராபுரம் கிராமத்தை சுற்றி இராணுவத்தினரும், காவல்துறையினரும்; இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொவிட் 19 பரிசோதனை கருவிகள் இலங்கைக்கு

கொவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறிவதற்கான 20064 மருத்துவ கருவிகள் சீன விமானம் மூலம் இன்றிரவு இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மேலும் 20 ஆயிரம் மருத்துவ உபகரணங்கள் அடுத்த வாரமளவில் இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மரியநாயகம் மாஸ்டர் அவர்களின் இழப்புச் செய்தியறிந்து ஆழ்ந்த துயரத்தில் வேதனையடைகின்றோம்.மக்கள் கல்விச்சமூகம் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் உயரிய போராளிகள் பொறுப்பாளர்கள் தளபதிகள் என இவரது தேசப்பற்றுக்கென்று தனித்துவமான மரியாதைக்குரியவராக திகழ்ந்தவர்.

இவர் ஆங்கில ஆசிரியராக பள்ளிமுதல்வராக ஆங்கில கல்விக்கான உதவிக்கல்விப்பணிப்பாளராக தனது பணியின் ஊடாக அரச உயர்பதவிகளைப்பெற்று ஓய்வு நிலைபெற்ற சமகாலத்தில் தாயக விடுதலைப்போராட்ட எழுச்சிமிகுகாலத்தை உருவாக்க போராளிகளுடன் இணைந்து பக்கபலமாக உழைத்த உண்மைத்துவமான மனிதர்.

தமிழர் புனவாழ்வுக்கழகம் மன்னார் மாவட்ட தலைவராக இருந்து மக்களுக்கான உடனடிமனிதாபிமான பணிகள்,இடைக்கால பணிகள்,நீண்டகாலபணிகள் என முகாமைத்துவ குழு ஊடாக திட்டமிட்டு மக்களது துன்பியல் இடம்பெயர்வு மீள்குடியேற்ற வாழ்வியலை இனங்கண்டு பணியாற்றயவர்.

மன்னார்மாவட்டத்தில் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களை உள்ளடக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தலைவராக பணியாற்றியவர்.

தாயக விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக சமாதான பேச்சுவார்த்தைக்காலபகுதியில் சரவதேச மத்தியஸ்தத்ததுடன் உருவாக்கப்பட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் விடுதலைப்புலிகள் அமைப்பின் மன்னார்மாவட்டம் சார்பான பிரதிநிதியாக அருட்திரு.சேவியர்குரூஸ் அடிகள், திரு.ப.மரியநாயகம் குரூஸ் இருவரையும் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்துறை நடுவப்பணியத்தால் நியமிக்கப்பட்டவர்களாவர்.

இவரது கண்ணியமான பணியின் மூலம் அவ்வப்போது இலங்கை போர்நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின் நிலவரம் இலங்கை அரசபடைகளின் போர்நிறுத்தமீறல்கள் விடுதலைப்புலிகளின் எதிர்பார்ப்பு க்களை உடனுக்குடன் தெரியப்படுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் நியாயத்தன்மையினை இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவிற்கு தெரியப்படுத்தி விடுதலைப்போராட்டத்தை சரவதேச மத்தியஸ்துவம் வகித்தவர்களுக்கு அறியப்டுத்திய தேசப்பற்றாளன்.WhatsApp Image 2020 04 10 at 09.18.09 ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்

தொடர்ந்து வந்த காலம் சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தமிழர்தாயக பிரதேசம் எங்கும் போர் தொடுத்த காலம் மன்னார் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை மக்கள் எதிர்நோக்கிய அத்தனை இடம்பெயர்வுகளிலும் தானும் ஒருவனாக துயரினைச்சுமந்து அவ்வப்போது மக்களுக்கு தேவையான பணிகளை தமிழர்புனர்வாழ்வுக்கழகத்தின் பணிப்பாளர்களுடன் இணைந்து செயற்படுத்தியவர்.

போரின் உச்சக்கட்டம் வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பாரிய இடம்பெயர்வில் மக்கள் சொல்லொணா துயரத்துள்சிறிலங்கா அரசு நடாத்திய ஆகாய கடல் தரைவழிமூலமான மும்முனைத்தாக்குதலில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட வேளையில் தனது அன்புக்குரிய வாழ்க்கைத்துணைவி ரமணி அன்ரியை இழந்தார் அவரது ஆறாத்துயருடன் தாயக விடுதலைப்போராட்டமும் ஓரிரு வாரங்களில் மௌனிக்கப்பட்டது.வேதனையின் விழிம்பிலும் அழிவில் இருந்து துவண்டு மீண்டும் தன்னைத்தானே சுதாகரித்துக்கொண்டு தனது இறுதிக்காலம் வரை மக்களுக்கும் மண்ணுக்கும் விசுவாசமாக தன்னால் இயன்ற பணியை பற்றுதியுடன் தனது சொந்த இடமான பறப்பான்கண்டலில் இருந்து செய்து வந்தவர்.

வாழும்வரை தனக்கென்று எந்த வித சுயநல எதிர்பார்ப்பின்றி தன்னலம் கருதாது பொதுநல சிந்தனையுடன் வாழ்ந்த தேசப்பற்றுமிக்க மரியநாயகம் மாஸ்டர் மக்கள் மனங்களில் நிறைந்தவராக என்றும் இருப்பார்.இவருக்கான இறுதிவணக்கத்தையும் இறுதி அஞ்சலியையும் இதயபூர்வமாக இணையவழியில் பகிர்வதில் ஆத்மதிருப்தியடைகிறேன்.

-இனியவன்-

கொரோனாவின் பின்னால் உள்ள அரசியல் – மனோ கணேசன்

கொரோனா தொற்று சந்தேக நபர்களை பரிசோதித்து கண்டறியும், 40,000 (Detection Kits for Covid-19 (PCR-Fluorescence Probing including Reagents+Swabs+tubes) கருவிகள் சீனாவிலிருந்து நன்கொடையாக வருகின்றன. முதல் 20,000 இன்று வருகிறது. மேலும், பெருந்தொகை முக கவசங்களையும் தருகிறோம் என சீனா சொல்கிறது.

கொரோனாவின் வீரிய வளர்ச்சியை கண்டறிய இலங்கையில் தேவையான அளவில், “பீசீஆர்” (Polymerase Chain Reaction) பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை. கொரோனா தொற்று சந்தேக நபர்கள் 45,000 பேர்வரை உள்ளார்கள் என இராணுவ-பொலிஸ் புலனாய்வுதுறை சொல்கிறது. இன்னமும் கண்டறியப்படலாம்.

ஆனால், ஒருநாளைக்கு 350 பேர்தான் பரிசோதிக்கப்படுகிறார்கள். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 2,000 பரிசோதனைகளாவது நடத்தப்பட வேண்டும். பரிசோதனை முடிந்து “நெகடிவ் ஓகே சான்றிதல்” பெற்று முடிந்து வீட்டுக்கு போன நபரும், “மீண்டும் கொரோனா பொசிடிவ்” என்று மருத்துவமனைக்கு திரும்பியுள்ளார். ஆகவே ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று முறை சோதனை செய்வதுதான் சரி. இதுதான் நிலைமை

இந்நாட்டில் இன்று உண்மையான கொரோனா தொற்றாளர்கள் எத்தனை பேர் என எவருக்கும் தெரியாது. அரசுக்கு இந்த உண்மை வெளிப்படுவதில் விருப்பமில்லை. அரசாங்கத்துக்கு “நாங்கள் சிங்கப்பூரை விட, கியூபாவைவிட கெட்டிக்காரர்கள்” எனக்காட்ட வேண்டியுள்ளது. தேர்தல்வரை, கொரோனாவின் வீரிய வளர்ச்சியை, மறைத்து காட்ட வேண்டிய அரசியல் தேவை இந்த அரசுக்கு இருக்கிறது. ஆகவேதான் இதை இழுத்துக்கொண்டே அரசு இருந்தது.

இதனாலேயே, ஜீஎம்ஒஏ (GMOA) என்ற வழமையான அரசு சார்பு மருத்துவர் அமைப்பே, இன்று அரசின் மீது சீறிப்பாய்ந்து, பரிசோதனைகள் நடத்துங்கள் என கூறுகிறது. எதிர்கட்சிகளாகிய நாமும் இதை வலியுறுத்தி கூறுகிறோம்.

இந்த அழுத்தங்கள் காரணமாகவே இன்று இந்த சோதனை கருவிகள் சீனாவில் இருந்து வருகின்றன. இவற்றை பயன்படுத்தி, உடனடியாக அரசாங்கம், பரிசோதனைகளின் தொகையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இளைஞர்களால் முறியடிப்பு!!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்டாங்குளம் காட்டுப்பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நடவடிக்கை வாரிக்குட்டியூர் இளைஞர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதை அறிந்த வாரிக்குட்டியூர் பகுதி இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் அப்பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர். இதன்போது கசிப்பு காச்சும் செயற்பாட்டை முன்னெடுத்த நபர்கள் தப்பிஓடினர்.

இந்நிலையில் கசிப்பு காச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும், பெரல்கள் என்பவற்றை வாரிக்குட்டியூர் பகுதி இளைஞர்கள் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபாண நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் கிராமங்களில் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடதக்கது.