Home Blog Page 2

கனேடிய பிரதமரின் குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை அரசாங்கம்?

போரின் போது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்தை இலங்கை நிராகரித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 ஜூலை 2024 அன்று கனேடிய பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்த குறிப்புகளை இலங்கை அரசாங்கம் கடுமையாக நிராகரிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதனை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“கனடா பிரதமரின் இந்த அறிவிப்பு இரு நாடுகளிலும் ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல” என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கறுப்பு ஜூலை இடம்பெற்று 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு கனடா பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில்,

“இன்று நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் கொழும்பில் தமிழ் பொதுமக்கள் மற்றும் வணிகங்களை குறிவைத்து வன்முறைத் தாக்குதல்கள் தொடங்கின. ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகினர்.

பல தமிழர்கள் காயமடைந்தனர், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படும் தமிழர் விரோதப் படுகொலை, பல தசாப்தங்களாக ஆயுத மோதலாக மாறியதில் பதட்டங்களை அதிகரித்தது. இது இலங்கை வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக உள்ளது.

2022 ஆம் ஆண்டில், கனடா பாராளுமன்றம் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒரு பிரேரணையை ஏற்றுக்கொண்டது.

உலகெங்கிலும் உள்ள தமிழ்-கனடியர்கள் மற்றும் தமிழ் சமூகங்கள் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கும் கௌரவிப்பதற்கும் கனடாவின் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும்.

“கறுப்பு ஜூலைக்குப் பின்னர், கனடாவில் 1,800 தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கும், தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் புதிய வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை நிறுவியது.

கனடாவில் இப்போது உலகின் மிகப்பெரிய தமிழ் புலம்பெயர்ந்தோர் உள்ளனர், மேலும் தமிழர்-கனடியர்கள் நம் நாட்டிற்கு ஒவ்வொரு நாளும் செய்யும் பங்களிப்புகளை நாங்கள் கொண்டாடுகிறோம் – நாங்கள் அவர்களை எப்போதும் பாதுகாப்போம்.

“இந்த நாளில், கறுப்பு ஜூலையின் போது பாதிக்கப்பட்ட மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் கனடியர்களுடன் இணைந்து கொள்கிறேன்.

இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்போம், மேலும் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு வெறுப்பு மற்றும் வன்முறை இல்லாத, அமைதியான எதிர்காலத்தை கட்டியெழுப்ப மீண்டும் உறுதியளிப்போம்.” என தெரிவித்திருந்தார்

பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா 2024 இன்று ஆரம்பம்

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திரு விழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடை பெறும் இந்த திருவிழாவில் அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 17 நாட்கள் நடைபெறும் ஒலிம்பிக் திருவிழாவில் 39 விளையாட்டுகளில் 329 நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நதியில் நடைபெறுகிறது. அணிவகுப்பில் தேசியக் கொடியை டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல், பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து ஆகியோர் ஏந்திச் செல்கின்றனர்.

‘திருடப்பட்ட அனைத்து பணத்தையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்’:சஜித் பிரேமதாச

எமது அரசாங்கத்தில் நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன் கொண்டுவருவதுடன் திருடப்பட்ட அனைத்து பணத்தையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். நாட்டை வங்குராேத்து அடையச்செய்தவர்களுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலே நாங்கள் அப்போது நாட்டை பொறுப்பெடுக்க முன்வரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை வங்குராேத்து அடையச் செய்தவர்கள், தற்போது எங்களுக்கு தர்ம போதனை செய்கிறார்கள். எங்களுக்கு போதனை செய்வதற்கு முன்னர் தரமத்தின் பிரகாரம் அவர்கள் முதலாது செயற்பட வேண்டும். பொருளாதார சவாலை ஏற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த சவால் நிலையை ஏற்படுத்தியவர்கள் யார். கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான அரசாங்கத்தின் பிழையான, முட்டாள்தனமான தீர்மானங்கள் காரணமாகவே நாடு வங்குராேத்து நிலைக்கு சென்றது.

நாட்டை வங்குரோத்து அடையச் செய்து நாட்டை சீரழித்த திருடர்களுடன் இணைந்து  நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் முன்வராதமை நாங்கள் செய்த பாவம்  என இவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாவத்தை சுமக்க நாங்கள் விருப்பம். ஆனால் பொருளாதாரத்தை வீழ்ச்சியடை காரணமானவர்கள் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இவர்கள் மறந்துள்ளனர். கோத்தாபய ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ், எஸ்.ஆர். ஆட்டிகல, பீ,பீ. ஜயசுந்தர உள்ளிட்ட குழுவினர் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும் நாங்கள் மக்கள் ஆணை ஒன்றை பெற்றுக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை, மக்கள் நலனுக்காக மீள் பரிசீலனைக்கு செல்வோம். நாணய நிதியத்துடன் மிகவும் சிநேகபூர்வமான முறையில் இதுதொடர்பில் நடவடிக்கை எடுப்போம் நிச்சியமாக அந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம். இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மாற்றுத்திட்டம் இருப்பது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்காகும். வங்குராேத்து அடைந்துள்ள நாட்டில் ஊழல் மோசடி செய்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழுத்துக்கொள்வதற்கு மதுபானசாலை அனுமதி பத்திரம் வழங்கும் இவர்களுக்கு நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

அதனால் நாங்கள் நாட்டை கட்டியெழுப்ப முடியுமான  அனைத்து துறைகளையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம். அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள பொருளாதார நிலைமாற்றம் சட்டத்தில் முழுமையான இணக்கப்பாடு எமக்கு இல்லை. அதனால் எமது ஆட்சியில் இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வோம். அதேபோன்று நாட்டை சீரழித்த அனைவரையும் சட்டத்துக்கு முன்கொண்டுவருவோம். நாட்டில் திருடிய அனைத்து பணத்தையும் மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவோம் என்ற உறுதியை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறோம் என்றார்.

ஜனாதிபதித் தோ்தலுக்கான தினம் அதிவிசேட வா்த்தமானி மூலம் இன்று அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுத்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் அதிவிசேட வர்த்தமானி ஊடாக அதனை அறிவிக்கவுள்ளதாக நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.

1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனத்தை வெளியிடும் திகதியும், குறித்த நியமனங்களை ஏற்கும் திகதியும் பற்றி அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று 26 ஆம் திகதி வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியும், ஏனைய நியதிச்சட்ட ஏற்பாடுகளும் பற்றி தனிப்பட்ட பலரும் முன்வைக்கும் கருத்துக்கள் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழு எவ்வித பொறுப்பையும் ஏற்காது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தவணையிடப்படும் குருந்தூர்மலை விவகார வழக்கு!

குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அது மீண்டும் அடுத்த வருடத்திற்கு தவணையிடப்பட்டுள்ளது.

B1053 /2022 என்ற இலக்கமுடைய வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கு இடம்பெற்றிருந்தது. குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணை விவாதங்கள் நடைபெற்றது. இதனையடுத்து 2025 ஆம் ஆண்டு ஆண்டு தை மாதம் 16 ஆம் திகதிக்கு வழக்கு மீண்டும் நீண்ட கால இடைவெளியின் பின்னர் தவணையிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்க கூடாது , குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022.09.21 குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அவ் ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸார், பொலிஸ் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் பொலிஸ் நிலையம் சென்றவர்களை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வியாழக்கிழமை (25)  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் இன்றையதினம்  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.

சர்வதேச விசாரணையை தேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மொரிட்டேனியா: கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்து விபத்து: 300 பேர் பயணம் செய்ததாக தகவல்

மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர்.

ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவாசிகளின் படகே கவிழ்ந்துள்ளது என ஐஓம்எம் தெரிவித்துள்ளது.

நீண்ட மீன்பிடிபடகொன்றில் 300 பேர் பயணம் செய்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர்களது படகு ஏழு நாட்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளது.

கம்பியாவின் பிரோக்கில் 300 பேர் படகில் ஏறினார்கள்,ஜூலை 22ம் திகதி நவாக்சோட் என்ற பகுதியில் படகுகவிழ்ந்துள்ளது என ஐஓஎம் தெரிவித்துள்ளது.

190பேரை தேடும் பணிகள் இன்னமும் இடம்பெறுகின்றன என ஐநாவின் அமைப்பு தெரிவித்துள்ளது.

103 பேர் கரையோர காவல்படையினர் மீட்டுள்ளனர், அதே நேரம் 25 உடல்களையும் மீட்டுள்ளனர் என கரையோர காவல்படையின் தளபதி தெரிவித்துள்ளார்.

கரையோர காவல்படையினர் அந்த பகுதிக்கு சென்றவேளை ஏற்கனவே 15 பேர் உயிரிழந்திருந்தனர் என 10 பேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா செல்ல முயலும் குடியேற்றவாசிகளிற்கான பிரதான இடைத்தங்கல் நாடாக மொரெட்டேனியா காணப்படுகின்றது. ஆயிரக்கணக்கான படகுகள் குடியேற்றவாசிகளுடன் இங்கிருந்து புறப்படுவது வழமை.

ஆபத்தான இந்த பாதையில் பயணிக்கும் படகுகள் ஸ்பெயினின் கனரி தீவுகளை நோக்கி செல்கின்றன – கடந்த வருடம் இந்த தீவிற்கு 40,000க்கும் அதிகமானவர்கள் வந்து சேர்ந்தனர் என தெரிவிக்கும் ஸ்பெயின் அரசாங்கம் இது முன்னைய ஆண்டை விட அதிகம் என குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பாவிற்கு செல்ல முயலும் குடியேற்வாசிகள் அளவுக்கதிகமானவர்கள் ஏற்றப்பட்ட  படகுகளில் ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

2024ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஸ்பெயினை சென்றடைய முயன்ற 4000க்கும் அதிகமானவர்கள் கடலில் உயிரிழந்துள்ளனர் என ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

”நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த மதக் கல்வி ஊக்குவிக்கப்படும்”

“நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த கல்வியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி நிதியத்தில் இருந்து புலமைப்பரிசில்கள் வழங்கும் வேலைத்திட்டத்தின் புதிய கட்டத்தை இன்று நாம் ஆரம்பித்துள்ளோம்.

சமய மாணவர்களுக்கும் இந்த புலமைப்பரிசில்களை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நாட்டில் துறவிக் கல்விக்கான கற்றல் செயற்பாடுகள் எந்த காரணத்திற்காகவும் வீழ்ச்சியடைவதை நான் அனுமதிக்க மாட்டேன். பௌத்த சமய ஒழுங்கு முறையில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

நாட்டில் புதிய தலைமுறைக்கா பிக்குகளை கட்டியெழுப்புவதற்கு தேவையான பின்னணியை நாம் தயார் செய்ய வேண்டும். அதற்காக அரசாங்கம் செய்யக்கூடிய முக்கியமான செயற்பாடுதான் இந்த புலமைப்பரிசில் திட்டமாகும்.

நாட்டில் தொடர்ந்து பௌத்த கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
நாட்டில் எந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இந்த கடமையில் இருந்து எவரும் மீறிச் செல்லமுடியாது.

நாடு எவ்வாறான சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் பௌத்த மதக் கல்வி தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

 

விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்: அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பு

புதிய சமசமாஜ கட்சியின் (Nava Sama Samaja Pakshaya NSSP) தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார். அவருக்கு வயது 81 ஆகும்.

இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட விக்கிரமபாகு கருணாரத்ன, மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தன் கொள்கைகளுக்காக நின்று போராடிய ஒரு தலைவர். கருணாரத்ன 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார்.

மேலும்  விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவரின் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நாளை தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டிகள்…

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை (ஜூலை 26) தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டிகள்.

இந்தியா சார்பில் 117 பேர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 10,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.