Home Blog Page 4

இலங்கை அரசு தொடர்ந்து சிறுபான்மை மக்களை துன்புறுத்துகின்றது 

இலங்கை அரசு பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தி தனக்கு எதிரானவர் களையும், சிறுபான்மை மக்களை யும் துன்புறுத்தி வருவதாக அமெரிக்காவின் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட மனித உரி மைகள் கண்காணிப்பகம் கடந்த புதன்கிழமை  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எழுந்தமானமான கைது மற்றும் தடுத்து வைத்து துன்புறுத்து வது போன்றவற்றால் பலர் நீண்ட காலமாக துன்பங்களை சந்தித்து வருகின்றனர். நீண்டகாலம் தடுத்து வைக்கும் மற்றும் எழுந்தமானமாக கைது செய்யும் அதிகாரங்களை பயங்கரவாதச் சட்டம் அரசுக்கு வழங்குகின்றது.
ரணில் விக்கிரமசிங்கா 2022 ஆம் ஆண்டு அரச தலைவராக பதவியேற்றபின்னரும் இந்த சட்டம் தொடர்கின்றது. அனைத்துலக நாணய நிதியமும் இது தொடர்பில் 2023 ஆம் ஆண்டு கருத்தில் எடுத்திருந்தது.
2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் 2023 ஆம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக மாற்றப்பட்டபோதும் அதுவும் மக்களை துன் புறுத்தும் சரத்துக்களைக் கொண்டுள்ளது.
எனவே இந்த சட்டத்தை அகற்றுவதற்கு இலங்கை அரசின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா ஆகிய நாடுகள் அழுத்தங்களை மேற்கொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 46/1 என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி, தொழிற்கட்சி அரசுக்குச் சொல்லும் செய்தி என்ன? – தமிழில்: ஜெயந்திரன்

ஐக்கிய இராச்சியத்தில் தற்போது நடந்து முடிந்திருக்கின்ற பொதுத்தேர்தலில், ஸ்ராமரின் தொழிற்கட்சி, 1997ம் ஆண்டு, புதிய தொழிற்கட்சி என்ற பெயரில், ரோணி பிளேயர் ஈட்டிய வெற்றியைப் போன்று, அதிக ஆசனத்தைப் பெற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது.
அதற்கு முதல் நாள், கீயர் ஸ்ராமரின் (Keir Starmer) தொழிற்கட்சி, ஐக்கிய இராச்சி யத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், 1997ம் ஆண்டு, புதிய தொழிற்கட்சி என்ற பெயரில் ரோணி பிளேயர் (Tony Blair) ஈட்டிய வெற்றியைப் போன்று, அதிக ஆசனத்தைப் பெற்று வெற்றியை ஈட்டியிருந்தது.
பதின்நான்கு வருடக் காத்திருப்புக்குப் பின்னர், பழமைவாதக் கட்சியின் மோசமான ஆட்சிக்குப் பின்னர், தொழிற்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் இங்கு, இவற்றையெல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விடயம் உற்றுநோக்கப்படவேண்டியிருக்கிது.
உண்மையில் தொழிற்கட்சி பெற்ற இந்த அமோக வெற்றி, ஸ்ராமரின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டதனால் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் ரோறி (Tory) என்று அழைக்கப்படுகின்ற பழமைவாதக்கட்சியை மக்கள் முற்றுமுழுதாக நிராகரித்ததே இதற்கான முழுமுதற்காரணம் ஆகும்.
நேற்று இரவு, பழமைவாதக் கட்சியினர் துடைத்தழிக்கப்பட்டார்கள். பழமைவாதக் கட்சி க்கு வாக்குச் செலுத்த மக்கள் விரும்பவில்லை. பழமைவாதக் கட்சியின் கோட்டை எனக் கருதப்பட்ட தொகுதிகளில் கூட, முன்னாள் பிரதம மந்திரிகளான திரேசா மே, போறிஸ் ஜோண்சன், டேவிட் கமறொன், மற்றும் பிரித்தானிய வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பிரதமராகப் பணியாற்றிய லிஸ் ற்றஸ்ற் ஆகியோரின் தொகுதி
களில் கூட அவர்கள் தோல்வியைத் தழுவியிருக் கிறார்கள்.
மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய வகை யில், பழமைவாதக் கட்சியினர், தங்களது 250 ஆசனங்களை இழந்திருக்கிறார்கள். பழமைவாதக் கட்சியின் முன்னணி ஆளுமைகளான, ஜேக்கப் றீஸ் மொக், பெனி மோடோண்ட், கிராண்ட் ஷப்ஸ் ஆகியோர் கூட தமது ஆசனங்களை இழந் திருக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாதவாறு ரோறிக் கட்சியின் அமைச்சரவையைச் சேர்ந்த, 11 முன்னாள் அமைச்சர்கள் தமது பாரா ளுமன்ற ஆசனங்களைக் கோட்டைவிட்டிருக் கிறார்கள். பழமைவாதக் கட்சி முற்றாகத் துடைத் தழிக்கப்பட்டிருக்கிறது.
அதே நேரம், தொழிற்கட்சி அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறது. ஆனால் அவர் களுக்கு வாக்குச் செலுத்திய வாக்காளர்களில், மூன்றில் ஒரு வீதமானோர் மட்டுமே, அதாவது 35 வீதமானோர் மட்டுமே தொழிற்கட்சிக்கு என்று தமது வாக்குகளை அளித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் தொழிற்கட்சி பெற்ற வாக்குகள்  1.4 வீதத்தால் மட்டுமே அதிகரித்திருக்கிறது. இது பெருமளவில் ஸ்கொட்லாந்தில்  எஸ்என்பி (SNP) கட்சிக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் ஆகும். 2017ம் ஆண்டில் ஜெறெமி கோபினின் (Jeremy Corbin) தலைமையில், தொழிற்கட்சி பெற்ற வாக்குடன் ஒப்பிடும் போது, இது 5 சதவீதம் குறைவானதாகும்.
2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில், பழமை வாதக் கட்சியை பிரித்தானிய மக்கள் நிராகரித்தது போல, மீண்டும் ஒரு தடவை அந்தக் கட்சியை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்றால், கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சியும் இவ்வாறான ஒரு வெற்றியை நிச்சயமாகப் பெற்றிருக்கும்.
பிரிட்டன் காலாதிகாலமாகப் பின்பற்றி வருகின்ற தேர்தல் நடைமுறையே இதற்கான காரணம் ஆகும். இங்கே வாக்காளர்கள் ஒரேயொரு வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். எந்த வேட்பாளர் அதிகமான வாக்குகளைப் பெறுகின்றாரோ அந்த வேட்பாளர் வெற்றியைத் தனதாக்கிக் கொள்வார். இந்த அணுகுமுறையால் தான் இரண்டு கட்சி ஆட்சி பிரிட்டனில் தக்கவைக்கப்படுகிறது. இது உண்மையில் மக்களது விருப்புக்கு முரணானதாகும்.
இவ்வாறான ஒரு பிரச்சினையான தேர்தல் நடைமுறையில் கூட, சுயேச்சை வேட்பாளர் களைத் தெரிவுசெய்ததன் மூலம் தொழிற்கட்சிக்கு அவர்கள் ஒரு தெளிவான செய்தியைச் சொல்லி யிருக்கிறார்கள்.
இந்தத் தேர்தலில், ஸ்ராமர் தலைமையிலான தொழிற்கட்சி, முன்னர் தங்கள் கோட்டைகளாக விளங்கிய பல தொகுதிகளில், சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்திருக்கிறது. காஸாவில் நிபந்தனையற்ற போர்நிறுத்தம் உடனடியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றும்,  பல பத்து ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் தொடரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி, பாலஸ்தீன ஆதரவுத்தளத்தில் நின்றுகொண்டு, இந்த சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலை எதிர்கொண்டிருந்தார்கள். 5 தொகுதிகளில் வாக் காளர்கள், காஸாவில் நடைபெற்றுவரும் யுத்தம் தொடர்பான ஸ்ராமரின் இஸ்ரேல் ஆதரவுக் கொள்கையைப் புறந்தள்ளி, மேற்குறிப்பிடப்பட்ட பாலஸ்தீன மக்களின் பிரச்சினைக்கு ஆதரவாக போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களைத் தெரிவுசெய்திருக்கிறார்கள். பதவியிலிருந்து இறக் கப்பட்ட முன்னாள் தொழிற்கட்சித் தலைவரான ஜெறெமி கோர்பின், வடக்கு இஸ்லிங்ரன் தேர்தல் தொகுதியில் பாலஸ்தீனச் சார்பு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, இலகுவாக வெற்றியடைந்திருக்கிறார்.
தொழிற்கட்சி வேட்பாளருக்குப் பாதுகாப்பான தொகுதிகள் எனக்கருதப்பட்ட பல தொகுதி களில், போட்டியிட்ட பாலஸ்தீன சார்பு சுயேச்சை வேட்பாளர்கள், தொழிற்கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் பெரும்பான்மையை கணி சமான அளவு குறைத்திருக்கிறார்கள். இல்போட் (Ilford) தொகுதியில், தொழிற்கட்சியின் நிழல் சுகாதாரச் செயலரான, வெஸ் ஸ்றீற்றிங்கின் 5000 வாக்குகள் பெரும்பான்மையை வெறும், 500 வாக்காகக் குறைத்திருப்பவர், 23 வயதேயான பிரித்தானிய-பாலஸ்தீனப் பெண்மணி லெயான் மொஹமத் ஆவார். உண்மையில் இங்கே தொழிற்கட்சி வேட்பாளர் அரும்பொட்டில் வெற்றிபெற்றிருக்கிறார். அதே போலவே, பேர்மிங்காம் யாட்லி தொகுதியில் முன்னர் 10,000 வாக்குகள் பெரும்பான்மையைக் கொண்டிருந்த தொழிற்கட்சி வேட்பாளரான ஜெஸ் பிலிப்ஸின் பெரும்பான்மை, பாலஸ்தீன சார்புக் கொள்கையைக் கொண்டிருக்கும் சிறிய கட்சியின் சுயேச்சை வேட்பாளரால் சில நூறு வாக்குகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
முன்னெப்போதும் இல்லாதவாறு சுயேச்சை வேட்பாளர்கள் பெற்ற வெற்றி, முஸ் லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளில், காஸா தொடர்பாக ஸ்ராமரின் கொள்கைக்குக் கிடைத்த எதிர்ப்பு என்றே பிரிட்டனின் முக்கிய ஊடகங்கள் விளக்கம் கொடுத்துள்ளன. காஸாவில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையை, முஸ்லீம் மக்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்ற தவறான புரிதலை இது பிரதிபலிக்கிறது. இவ்வாறான கருத்தை வெளியிடுபவர்கள் முஸ்லீம் மக்களிடையே பிரித்தானிய கட்சிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிளவைப் பெரிதுபடுத்தி, முஸ்லீம் மக்களுக்கு எதிரான உணர்வுகளுக்குத் தூபமிட்டு வருகின்றன.
இங்கே உண்மை மிகவும் தெளிவா னது. முஸ்லீம்களாக இருந்தாலென்ன, இல்லா விட்டாலென்ன, பிரித்தானியாவில் வாழும் மக்களில் அநேகமானோர், காஸாவில் நடக்கும் படுகொலைகள் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றும் அங்கு நீதி நிலைநாட்டப்படவும் வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். அது மட்டுமன்றி, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மூலோபாய ரீதியிலான நட்பு நாடு என்று கருதப்படும் ஒரு நாடாக இருந்தாலும், அந்த நாடு, பன்னாட்டுச் சட்டங்களை மீறுகின்ற போதும், இனப்படுகொலையை மேற்கொள்ளுகின்ற போதும், அவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் ஆற்றலை தங்கள் பிரதிநிதிகள் கொண்டிருக்க வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அத்தோடு நின்றுவிடாது, பாலஸ்தீன மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வலுக்கட்டா யமாக வெளியேற்றிய விடயத்தில், ஐக்கிய இராச்சியம் வகித்த வரலாற்றுப்பங்கை ஏற்றுக் கொள்கின்ற பிரித்தானிய மக்கள், கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்குப் ஈடாக ஒரு கொள்கைவழி நடைமுறையை பிரித்தானியா இந்த விடயத்தில் பின்பற்ற வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றார்கள். இதனாலேயே, காஸா தொடர்பாக தொழிற்கட்சி கொண்டிருக்கும் கொள்கைகள், அந்த மக்கள் தொழிற்கட்சியை விட்டுச் செல்லக் காரணமாக அமைந்திருக்கிறது.
கடந்த தேர்தலில் நிகழ்ந்த இன்னொரு முக்கிய நிகழ்வு, 14 வீதமான வாக்குகளையும் பாராளுமன்றத்தில் நான்கு ஆசனங்களையும் தனதாக்கிக் கொண்ட தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்டதும், குடிவரவுக்கு எதிரானதுமான கட்சி பெற்றுக்கொண்ட வெற்றியாகும். முன்னாள் யுகேஐபியின் (UKIP) தலை வரும் பிரெக்சிற் கொள்கையைத் தீவிரமாக முன்னெடுத்தவருமான நைஸல் பராஜ் (Nigel Farage), இப்போது கிளாக்ரன் தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சீர்திருத்தக் கட்சி சார்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத போதிலும், குடிவரவு மற்றும்  ஐரோப்பாவுடனான உறவு போன்ற விடயங்களில் பிரித்தானியக் கொள்கை களை வடிவமைப்பதில், கடந்த காலத்தில் முக்கிய பங்கை அவர் வகித்திருக்கிறார். தற்போது அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டதால் இன்னும் அதிக செல்வாக்கை அவர் செலுத்துவார் என்பதை எதிர்பார்க்கலாம்.
பாராளுமன்றத்தில் உள்ளே இருந்து கொண்டு, குடிவரவு தொடர்பான விடயங்களில் கடுமையான கொள்கைகளைப் பின்பற்ற தொழிற்கட்சிமேல் அவர்கள் அழுத்தத்தைப் பிரயோகிப்பார்கள். இவ்வாறான அழுத்தத்தி லிருந்து தன்னை விடுவித்து, பன்னாட்டுச் சட்டங் களுக்கு ஏற்ற வகையிலும், அறநெறி ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், குடிவரவு மற்றும் அகதித்தஞ்சம் வழங்கும் விடயங்கள் தொடர்பான கொள்கைகளை நாட்டுக்குப் பயன் தரக்கூடிய வகையில் ஸ்ராமர் வகுக்க வேண்டியிருக்கும்.
பதின்நான்கு வருடங்களாகத் தொடர்ந்த,  பழமைவாதக் கட்சியின் ஆட்சியில், பிரித்தானிய மக்கள் இழந்தது அதிகம். எமது வாழ்க்கை முன்னரை விட  அதிகம் கஷ்டம் நிறைந்ததாக மாறிவிட்டது. எமது நாட்டின் பொதுச்சேவைகள் அனைத்தும் முடங்கிப்போகும் நிலைக்கு வந்து விட்டன. அதுமட்டுமன்றி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி சுட்டிக்காட்டுவது போல, ஓர் ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுத் துன்புறும் ஓர் மக்கள் சமூகம் மீது மேற்கொள்ளப்படும் ஓர் இனப்படுகொலை யுத்தத்துக்கு, எமது அரசு ஆதரவை வழங்கி வருவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்த மக்க ளின் வரலாற்றை நிர்ணயித்ததில் காலனீய பிரித்தானியாவுக்கு அதிகமான பங்கு உண்டு.
மாற்றம் ஒன்று தேவை என்பது எல்லாரதும் எதிர்பார்ப்பு ஆகும். இதனால் தான் பழமைவாதக்கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள். நாட்டின் தலைமைத்துவத்தைக் கையிலெடுக்கும் இத்தருணத்தில், தனது வெற்றி முழுமையானது அல்ல என்பதையும், தமது குறைகளைத் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையை மக்களில் அதிகமானோருக்கு அவரால் கொடுக்க முடியவில்லை என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தலில் மக்கள் அளித்திருக்கும் முடிவுகளை, தான் நன்கு புரிந்திருக்கிறேன் என்பதை ஸ்ராமர் செயலில் காட்ட வேண்டும். பழமைவாதக் கட்சியை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கிறோம். ஆனால் நிபந்தனையற்ற வகை யில் உங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பது அதன் பொருள் அல்ல.
ஐக்கிய இராச்சியத்தின் பிரதம மந்திரி என்ற வகையில், தான் ஆற்றிய முதலாவது உரையில், இந்த விடயத்தைத் தான் புரிந்துகொண்டிருப்பதாக வெளிப்படுத்திய ஸ்ராமர், இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் பிரதம மந்திரியாக தான் இருக்க விரும்புவதாகவும் குறிப்பாக தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பிரதமராக இருக்க விரும்புவதாக அந்த உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயத்தை ஸ்ராமர் காத்திரமாக எடுப்பாராக இருந்தால் – உண்மையில் நாட்டுக்காக அவர் காத்திரமாக எடுத்தே ஆகவேண்டும் – தனது கட்சியிலிருந்து தான் வெளியேற்றிய இடதுசாரிக்கொள்கையையுடைய தொழிற்கட்சி உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள், மற்றும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களது தேவை களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், வெளிநாட்டுக் கொள்கையில், மனித உரிமையைக் கடைப்பிடித்து, பன்னாட்டுச் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அனைத்துச் சக்திகள் போன்ற அனைவரையும் அவர் உள்வாங்க வேண்டும். சுயேச்சை வேட்பாளர்களையும், இடது
சாரிக் கொள்கையையுடைய சிறிய கட்சிகள் சார்ந்த பிரதிநிதிகளையும் அவர் அலட்சியம் செய்யக்கூடாது. காஸா, காலநிலை மாற்றம் போன்ற விடயங்களில் அவர்களது கருத்தையும் ஸ்ராமர் செவிமடுத்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யாவிட்டால், பழமைவாதக் கட்சியின் தோல்வியின் மீது அவர் பெற்றிருக்கும் வெற்றி, பொருள் அற்றதாகி விடும். சீர்திருத்தக் கட்சியிடமிருந்து அதிகமான அழுத்தத்தை அவர் எதிர்கொள்ள வேண்டி யிருக்கும் என்பது மட்டுமன்றி இடதுசாரிக் கட்சிகளிடமிருந்து எதிர்ப்பையும் பொறுப்புக் கூறலுக்கான அழுத்தத்தையும் நிச்சயமாக அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இடதுசாரிக் கட்சிகள் கடந்த தேர்தலில், குறிப்பிடத்தக்க தாக்
கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. பழமைவாதக்கட்சி வெளியேற்றப்பட்டுள்ள ஒரு சூழமைவில், தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பின்புலத்தில், பலவிதமான கொள்கைகளைக் கொண்ட இச்சிறுகட்சிகள் ஒன்றுசேர்ந்து, காஸா விடயம் போன்ற தங்களுக்கு முக்கியமான விடயங்களில், உருப்படியான நடவடிக்கைகளை அரசு எடுக்க,  அதற்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும்.
இதுவரை காலமும் ஐக்கிய இராச்சியத்தில் பின்பற்றப்பட்டு வந்த இரு கட்சி ஆட்சி தற்போது முடிவுக்கு வந்துவிட்டது என்பதை இந்தத் தேர்தல் சுட்டிக்காட்டுகிறது. தங்களது கட்சிக்குப் பிரமாணிக்கமாக இருப்பதைத் தவிர்த்து, தமது விழுமியங்களின் அடிப்படையில் மக்கள் வாக்களித்திருக்கும் இச்சூழலில், அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இடது சாரிக்கட்சிகள் இருக்கின்றன என்பது அவர்களால் இங்கு சரியாகப் புரிந்துகொள்ளப்படவேண்டும்.,
நன்றி: அல்ஜஸீரா

நிலச்சரிவு: எத்தியோப்பியாவில் 229 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த திங்கட்கிழமை அன்று கனமழை பொழிந்தது. இதையடுத்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 229 பொது மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்பு பணி தொடர்கின்றது.

இந்த சம்பவத்துக்கு பிறகு அங்கு குவிந்த மக்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர். இது தொடர்பான படங்களை அந்த நாட்டின் உள்ளூர் நிர்வாகம் பகிர்ந்துள்ளது.

நிலச்சரிவில் இருந்து ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கோஃபா மண்டலத்தில் கெஞ்சோ-ஷாச்சா பகுதியில் இந்த பேரிடர் சம்பவம் நடந்துள்ளது.

திங்கட்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு சிக்கி இருந்தவர்களை மீட்க சென்றவர்கள் மீது இரண்டாவது முறையாக மண் சரிந்த காரணத்தால் அதில் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. சுமார் 500 வீடுகளுக்கு செஞ்சிலுவை சங்கம் நிவாரண உதவி பொருட்களை அனுப்பியுள்ளது. உணவு, மருந்து மற்றும் தண்ணீர் போன்றவை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக எத்தியோப்பியா உள்ளது. மொத்தம் 120 மில்லியன் மக்கள் அங்கு வசிக்கின்றனர். வெள்ளம் மற்றும் வறட்சி என காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் இந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர். தெற்கு எத்தியோப்பியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதம் மழை காலமாக உள்ளது. அந்த நேரத்தில் இந்த பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து அரங்கேறி வருவதாக தெரிகிறது.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறவேண்டும்: கனடா பிரதமர்

இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டும் என கனடா தொடர்ந்தும் வேண்டுகோள் விடுக்கும் என கனடா பிரதமர்ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கறுப்;பு ஜூலையின் 41 வது வருடத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளதாவது-

41வருடங்களிற்கு முன்னர் இன்றைய தினம் இலங்கையின் கொழும்பில் தமிழ் பொதுமக்கள் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின.

ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் இழக்கப்பட்டன,மேலும் பல தமிழர்கள் காயமடைந்தனர், பாலியல் வன்முறைகளிற்கு இலக்கானார்கள்,நாட்டிலிருந்து தப்பியோட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

கறுப்பு ஜூலை எனப்படும் தமிழர்களிற்கு எதிரான இனக்கலவரம்,பதற்றங்களை அதிகரித்தது. அது பின்னர் தசாப்தகால ஆயுதமோதலாக பரிணமித்தது.

இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமாக அது விளங்குகின்றது.

2022 மே18ம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை கனடாவின் நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதுநிறைவேற்றியது.

இந்த அர்த்தமற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களை நினைவுகூர்வதில்கனடாவின் தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகத்தினருடன் ஐக்கியத்தை உள்ளதை வெளிப்படுத்துவதற்கான கனடாவின் அர்ப்பணிப்பை  இது வெளிப்படுத்துகின்றது.

மனித உரிமைகளின் உறுதியான பாதுகாவலன் என்ற அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டும் என கனடா தொடர்ந்தும்  வேண்டுகோள் விடுக்கும்.

கறுப்புஜூலையின் பின்னர் 1800 தமிழர்கள் கனடாவிற்குவருவதற்கும் தங்களினதும் தங்கள் குடும்பங்களினதும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தேவையான விசேட நடவடிக்கைகளை கனடா எடுத்தது.

உலகில் அதிகளவு புலம்பெயர் தமிழர்கள் தற்போது கனடாவிலேயே வாழ்கின்றனர்,ஒவ்வொருநாளும் அவர்கள் எங்கள் சமூகத்திற்கு வழங்குகின்ற பங்களிப்பை நாங்கள் கொண்டாடுகின்றோம்,நாங்கள் எப்போதும் அவர்களை பாதுகாப்போம்.

இன்றைய நாளில்,கறுப்புஜூலையில்துயரத்தை சந்தித்த அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதில் நான் கனடாவின் பிரஜைகளுடன் இணைந்து கொள்கின்றேன்.

கறுப்பு ஜுலை படுகொலையை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது: பா.உ உமா குமரன்

கறுப்பு ஜுலை கலவரங்களால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், இவ்விடயத்தில் நீதிக்கான தமது போராட்டம் தொடரும் என உறுதியளித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் அரங்கேறி இன்றுடன்  (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும் , தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ நிலைநாட்டப்படவில்லை.

இதுகுறித்து அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதலாவது தமிழ்ப்பெண் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட உமா குமாரன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.

அப்பதிவில் அவர் கறுப்பு ஜுலை கலவரங்களை அடுத்து தமிழ்மக்கள் உலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததாகவும்இ அவர்கள் இன்னமும் நீதிக்காகக் காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமாரனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவர்கள் என்ற போதிலும்இ போரின் விளைவாக பிரிட்டனுக்குப் புலம்பெயரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதன்படி கறுப்பு ஜுலை கலவரங்களின்போது இடம்பெற்ற கொடுமைகள் குறித்து தனது பெற்றோர் தனக்குக் கூறியிருப்பதாக எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ள உமா குமாரன், அக்கலவரங்களினால் ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளாகக் கடத்தப்படுவதாகவும், அவற்றை ஒருபோதும் மறக்கடிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்றைய தினத்தில்  கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்த அனைத்து உயிர்களையும் நினைவுகூருவதாகவும், இவ்விடயத்தில் நீதிக்கான தமது போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர்  வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் வெளியிட்ட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர இம்மாதம் 10ஆம் திகதியிடப்பட்ட புதிய அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை நிர்ணயித்து தொழில் ஆணையாளரால் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வர்த்தமானியொன்று வௌியிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சின் செயலாளர் ஆர்.பீ.ஏ.விமலவீர  மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.

இந்த வர்த்தமானியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும் விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் மேலதிக கொழுந்து கிலோகிராம் ஒன்றுக்கு 80 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊழலை வெளிப்படுத்தும் அதிகாரிகளை அடக்குவதா?: சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவு மீது குற்றச்சாட்டு

ஊழலை விசாரிப்பதற்குப் பதிலாக, அதனை வெளிப்படுத்தும் அதிகாரிகளை அடக்குவதற்கே சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவினர் செயற்படுவதாக சுகாதார தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கிடையில், செயலாற்றும் பதவிகள் மூலம் சுகாதார சேவையின் தகவல்களை மூடிமறைத்து, தகவல்களை அறியும் சந்தர்ப்பத்தையும் மறைத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவின் 27 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய மருத்துவ வழங்கல் துறைக்கு கூட நிரந்தர துணை இயக்குநர் ஜெனரல் இதுவரை காலம் நியமிக்கப்படவில்லை.

மருத்துவ ஆய்வுகூட சேவையில் கடமையாற்றும் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளது. கடமையாற்றும் பதவிகள் காரணமாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் வீழ்ச்சி கண்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பெல்லெனாவை இடமாற்றம் செய்யுமாறு கோரி தேசிய வைத்தியசாலை ஊழியர்கள் நான்கு தடவைகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட போதிலும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இடமாற்றம் செய்யுமாறு வைத்திய சங்கம் அச்சுறுத்திய நான்கு மணித்தியாலங்களில் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக” சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சீனா அனுமதி

இலங்கையில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழங்களுக்கு நீண்டகாலமாக விதிக்கப்பட்ட தடைகளை அந்நாட்டு அரசாங்கம் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர,

சீன சுங்க பொது நிர்வாக பிரதி அமைச்சர் (Vice Minister of General Administration of Customs) வாங் லிங்ஜூங் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு  எட்டப்பட்டுள்ளது.

இந்நாட்டில் அன்னாசி விளையும் விதம் உள்ளிட்ட கோழிப்பண்ணை தொடர்பான தயாரிப்புகளின் தரம் சீன சந்தையில் உறுதிப்படுத்துவதற்காக பல நடைமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் அதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என்றார்.

மேலும், சீனா சந்தை வாய்ப்புகளுக்கு போதுமான கோழி மற்றும் முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கறுப்பு ஜுலை- பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை: சமூகப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டு

தமிழர்களுக்கு எதிரான கறுப்பு ஜுலை கலவரங்கள் அரங்கேறி 41 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவில்லை என சமூகப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் அரங்கேறி இன்றுடன் (23) 41 வருடங்கள் கடந்திருக்கின்றன. தமிழர்கள் மத்தியில் மிகமோசமான தாக்கத்தையும், தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்பங்களையும் ஏற்படுத்திய இக்கலவரங்கள் தொடர்பில் இன்னமும் நீதியோ, பொறுப்புக்கூறலோ உறுதிசெய்யப்படவில்லை.

இந்நிலையில் கறுப்பு ஜுலை கலவரங்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என வலியுறுத்தி வடக்கு – தெற்கு சகோதரத்துவம் எனும் அமைப்பினால்  கொழும்பு, பொரளை கனத்தை பொதுமயானத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் ‘மீண்டுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம்’ எனும் தொனிப்பொருளில் நினைவுகூரல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த வடக்கு – தெற்கு சகோதரத்துவம் அமைப்பின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் ‘தமிழ்மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை மறவோம்’, ‘இனப்படுகொலைக்கு நீதி வழங்கு’ எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இங்கு கருத்து வெளியிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீநாத் பெரேரா, வடக்கில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டமையை அடுத்து, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகக்கொடூரமான வன்முறைகளை நினைவுகூர்ந்தார். அத்தோடு இந்நாட்டில் மீண்டுமொரு கறுப்பு ஜுலை கலவரங்கள் ஏற்படக்கூடாது என்பதை முன்னிறுத்தியே இந்த நினைவுகூரல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போதும் தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடரும் நிலையில், அவற்றைக் களைந்து அவர்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

அதேபோன்று கறுப்பு ஜுலை கலவரங்கள் ஆரம்பமான தினத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் பெரும் எண்ணிக்கையான தமிழ் கைதிகள் கொல்லப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டிய அவர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.

அதேவேளை அங்கு கருத்துரைத்த அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், சிவில் செயற்பாட்டாளருமான அருட்தந்தை சக்திவேல், யாழ் நூலக எரிப்பு, கறுப்பு ஜுலை கலவரங்கள் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்து சுட்டிக்காட்டியதுடன், இன்னமும் இந்நாட்டில் தமிழ்மக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழல் உறுதிசெய்யப்படவில்லை என விசனம் வெளியிட்டார். அதுமாத்திரமன்றி ஞானசார தேரருக்கும், ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் பிணை வழங்கமுடியுமெனில், பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கமுடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதே நேரம் பல பகுதிகளில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

யாழில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல்! | Virakesari.lk

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். முற்றவெளி மைதானம் முன்பாக   இவ் நினைவேந்தல் நடைபெற்றது.

அதே போல் கிளினொச்சியிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

இந்தியா: மோடியின் பாதுகாப்புக்கு 506.32 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழகம் புறக்கணிப்பு

இந்தியாவின் நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு – செலவு திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு நாடாளுமன்றில் தாக்கல் செய்தார். இதில்  பிரதமர் மோடியை பாதுகாக்கும் சிறப்பு பாதுகாப்பு படைக்கு 506.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டனங்களும் எழுந்துள்ளது.

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு வரவு – செலவு திட்டத்தில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்றமில்லை, தங்கம், வெள்ளி, பிளாட்டினத்திற்கு இறக்குமதி வரி குறைப்பு, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு, 80 கோடி மக்கள் பயன் பெறும் கரீப் அன்னயோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு ஆகிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், மத்திய நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த  வரவு – செலவு திட்ட உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகளே ஒருமுறை கூட இடம்பெறாத நிலையில், அதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த வரவு –  செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பீகார், ஆந்திராவை ஆளும் பா.ஜ.க-வின் கூட்டணி கட்சிகள் தங்கள் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்தன. இந்த கோரிக்கைக்கு இணங்க ஆந்திரா, பீகாருக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆந்திராவுக்கு ரூ. 15,000 கோடியும், பீகாரின் நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கு ரூ. 26,000 கோடியும் ஒதுக்கீடு செய்வதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும், பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

கண்டனம்

இந்நிலையில், மத்திய நிதியமையச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் உரையில் தமிழ்நாடு, தமிழ் என்ற வார்த்தைகளே ஒருமுறை கூட இடம்பெறவில்லை. வழக்கமாக திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியத்துடன் பட்ஜெட் உரை தொடங்கப்படும். இம்முறை அதுவும் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் – செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகளும், அதனைச் சார்ந்த தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.