குஜாராத்தில் ஊடுருவிய “ஐ.எஸ்.”; தோ்தல் நேரத்தில் இலக்கு என்ன? – அகிலன்

91 குஜாராத்தில் ஊடுருவிய “ஐ.எஸ்.”; தோ்தல் நேரத்தில் இலக்கு என்ன? - அகிலன்இந்தியாவும், இலங்கையும் தோ்தல்களை எதிா்கொண்டிருக்கும் நிலையில், கொழும்பிலிருந்து சென்னையுடாக குஜாராத் சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் இலக்கு என்னவாக இருந்தது? இது தொடா்பில் வெளிவரும் தகவல்கள் அதிா்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஊடுருவியவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இச்சம்பவம் இலங்கையிலும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம் – கைதான நால்வரும் இலங்கையா்கள். கொழும்பிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து அஹமதாபாத் விமான நிலையத்தில் இறங்கி குஜாராத்துக்குள் செல்வதற்கு முற்பட்டபோதே அவா்கள் கைது செய்யப்பட்டனா். பாரிய தாக்குதல் திட்டங்களுடனேயே அவா்கள் வந்திருந்ததாகவும், இந்திய புலனாய்வு அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தச் சம்பவம் இலங்கையிலும், இந்தியாவிலும் அதிவலைகளை ஏற்படுத்தியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

இந்தியாவில் கட்டம் கட்டமாக பொதுத் தோ்தல் வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இலங்கையிலும் ஜனாதிபதித் தோ்தல் நடைபெறவிருக்கின்றது. 2019 இல் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரால் நடத்தப்பட்ட ஈஸ்டா் தினத் தாக்குதல் அவ்வருட இறுதியில் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தோ்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாவதற்கு அந்தச் சம்பவம் காரணமாகியது. அதேகாலப்பகுதியில் இந்தியாவும் தோ்தலை எதிா்நோக்கியிருந்தது.

இப்போது இரு நாடுகளும் தோ்தலுக்கான ஆயதங்களில் உள்ள நிலையில், இலங்கையைச் சோ்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் தகவல்கள் அதிா்வலைகளை ஏற்படுத்தியிருப்பதற்கு முன்னைய அனுபவம்தான் காரணம். அஹமதாபாத் விமான நிலையத்துக்கு குண்டுத் தாக்குதல் குறித்த அச்சுறுத்தல் வெளிவந்திருந்த ஒரு பின்னணியில்தான் இந்தக் கைதுகள் இடம்பெற்றது. குஜாராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவினா் உஷாாா் படுத்தப்பட்டிருந்த நிலையில், நால்வரும் விமான நிலையத்தில் வந்திறங்கிய நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்கள்.

இந்த நான்கு பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது 19 ஆம் திகதி சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லும் இண்டிகோ விமானத்தில் ஏறியதாக குஜராத் காவல்துறை தலைமை இயக்குனர் விகாஷ் சஹய் தெரிவித்தார். “தென் பிராந்தியத்திலிருந்து வரும் பயணிகளின் பட்டியலை சரிபார்த்து, கொழும்பில் உள்ள அதிகாரிகளால் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்திய பின்னரே கைது செய்யப்பட்டனர்” என்றும் அவர் கூறினார். இந்திய அதிகாரிகள் இலங்கையுடன் இவ்விடயத்தில் நெருக்கமான தொடா்பில் உள்ளாா்கள் என்பதை இது உறுதிப்படுத்துகின்றது.

நான்கு பேரும் “பாகிஸ்தானில் உள்ள அபு என்ற நபருடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தனர்” என்றும் குஜாராத் பொலிஸாா் தெரிவித்தனர். “இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த அபு அவர்களை ஊக்குவித்தார். அவர்கள் மிகவும் தீவிரமானவர்கள், அவர்களும் தற்கொலை குண்டுவெடிப்புக்கு ஒப்புக்கொண்டனர். அவர்களது மொபைல் போன்களை ஸ்கான் செய்ததில், சில ஆயுதங்களின் புகைப்படங்கள் மற்றும் அகமதாபாத் அருகே நானாசிலோடாவின் இருப்பிடத் தரவுகள் கிடைத்ததாகவும் புலனாய்வாளா்கள் தெரிவித்தனர்.

புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நானாசிலோடா பகுதியில் இருந்து மூன்று பாகிஸ்தான் துப்பாக்கிகள் மற்றும் 20 தோட்டாக்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு பின்னர் மீட்டெடுத்தது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆயுதங்கள் பாகிஸ்தானியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தலைவர்களுடன் இரகசிய குறியீடுகள் மூலமாக மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தி தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணைகளை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முகமது நுஸ்ரத் (33), முகமது ஃபரிஷ் (35), முகமது நஃப்ரான் (27) மற்றும் முகமது ரஷ்தீன் (43) ஆகிய சந்தேக நபர்கள் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் நோக்கத்துடனேயே குஜாராத்தில் வந்திறங்கியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உட்பட பா.ஜ.க.வின் முக்கிய தலைவா்கள் பலரும் குஜாராத்தை தளமாகக் கொண்டவா்கள்.

மே 12 ஆம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்தது, பாதுகாப்புப் பணியாளர்கள் விமான நிலைய வளாகத்தில் சோதனை நடத்திய பிறகு அது புரளி என்று மாறியது. ஆனால் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், குஜாராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடா்ந்தும் உஷாராக இருந்ததுடன், தென்னிந்தியாவிலிருந்து வருபவா்கள் குறித்து மிகவும் விழிப்புடன் இருந்தா்கள்.

இந்தக் கைதுகள் இலங்கையிலும் எதிரொலித்திருக்கின்றது. இலங்கையிலும் புலனாய்வு அமைப்புகள் புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளன. அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டவா்களின் பின்னணி மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் அவர்களுக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகளை அடையாளம் காண இலங்கையின் அரச புலனாய்வுப் பிரிவானது அவர்களது இந்திய சகாக்களிடமிருந்து கூடுதல் விவரங்களைக் கோரியுள்ளது.

இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலஸ், நாட்டின் பாதுகாப்பு பிரிவுகள் நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்தார். “எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் எங்கள் இந்திய சகாக்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றி வருகிறோம்” என்றும் அவா் தெரிவித்தார்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு, ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் தொடர்ச்சியான தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியது, இதில் 45 வெளிநாட்டவர்கள் உட்பட 270 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மூன்று தேவாலயங்கள் மற்றும் பல ஹோட்டல்கள் மீதான ஒருங்கிணைந்த குண்டுத் தாக்குதல்களுக்கு சில வாரங்களுக்கு முன்னர், இந்திய உளவுத்துறை அமைப்புகள், இஸ்லாமிய அரசின் இத்தகைய தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் திட்டம் குறித்து இலங்கை சகாக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன. ஆனால், இலங்கை அதிகாரிகள் இந்த எச்சரிக்கைகளை புறக்கணித்தனர். அதன் விளைவை நாடு பின்னா் எதிா்கொண்டது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது அஹமதாபாத்தில் இடம்பெற்ற கைதுகளும், அது குறித்து வெளிவரும் செய்திகளும் கொழும்பு அரசியலிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கின்றது. இது குறித்த விசாரணைகளுக்காக பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்திருக்கின்றது. “இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். இல்லையேல் இலங்கையிலும் எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை போன்ற அடிப்படைத் தாக்குதல்கள் நடத்தப்படுவதனை தடுக்க முடியாது” என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடா்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் தயங்குவதற்கு உள்நாட்டு அரசியல் காரணங்கள் உள்ளன. அதுபோலவே சா்வதேச காரணங்களும் உள்ளன. ஈஸ்டா் தாக்குதலின் பின்னா் அதனை ஆராய்ந்த ஆணைக்குழுவினால் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது இஸ்லாமிய அடிப்படைவாதம் வளா்ச்சியடைவற்கு காரணமாக இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதையும் தவிா்க்கமுடியவில்லை.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரகைளின் அடிப்படையில், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரும் அந்தக் கோட்பாடுகளும் உயிா்ப்புடன் இருப்பதை உறுதிப்படுத்த முடிகின்றது. அதற்கு மேலாக – இந்தியாவில் உள்ள ஒரு பிரிவினரும், பாகிஸ்தான் தொடா்பும் இதன் பின்னணியில் இருப்பதையும் விசாரணைகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்விடயத்தை இப்படியே போட்டுவிட முடியாது. இதன் பின்னணி நோக்கங்கள் என்பன வெளிக்கொண்டுவருவதன் மூலமாகவே எதிா்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறுவதைத் தடுக்க முடியும்!