தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசு மௌனம் காக்கவில்லை – சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு

“தமிழ் பொது பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசுக் கட்சி மௌனம் காக்கவில்லை. நான் உட்பட பலர் வெளிப்படையாக பேசியிருக்கிறோம். எமது கட்சிக்குள் இரு நிலைப்பாடுகள் உள்ளன. மத்திய குழுவிலும் கலந்துரையாடினோம் முடிவு எட்டப்படவில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அறிவித்ததும் முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

சிறீதரன் நேற்று கிளிநொச்சியிலுள்ள தனது கட்சி பணிமனையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில், செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி – பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் அரசு கட்சி ஏன் மௌனம் காக்கிறது?

பதில் – தமிழ் அரசுக் கட்சி மௌனம் காக்கவில்லை. நான் உட்பட பலர் வெளிப்படையாக பேசியிருக்கிறோம். எமது கட்சிக்குள் இரு நிலைப்பாடுகள் உள்ளன. மத்திய குழுவிலும் கலந்துரையாடியுள்ளோம் – முடிவு எட்டப்பட வில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை அறிவித்ததும் முடிவு எடுக்கப்படும்.

2002ஆம் ஆண்டு ஒஸ்லோவில் எடுக்கப்பட்ட சமஷ்டி முடிவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரித்திருந்தார். அதனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவரும் ஏனைய வேட்பாளர்களும் முன்வைக்கட்டும். அதுவரை எமது இனத்துக்கு நடந்த அநீதிக்கு நீதியை வேண்டி தெளிவாக சொல்வதற்கு பொது வேட்பாளரை கொள்கைக்காக களம் இறக்க வேண்டும் என்றார்.