அனைத்து இரத்த வகைகளுக்கும் யாழ். மருத்துவமனையில் தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ‘ஓ’ வகை குருதிக்கு பெருந்தட்டுப்பாடு நிலவுகிறது. அத்துடன், ஏனைய குருதி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, பொது மக்கள் குருதிக் கொடை அளிக்க வேண்டும் என்று இரத்த வங்கி கேட்டுள்ளது.

யாழ். போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சை மற்றும் ஏனைய சத்திர சிகிச்சைகள், விபத்துகளில் காயமடைந்தவர்கள், புற்றுநோயாளர்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு என்று தினசரி 50 பைந்த் இரத்தம் தேவைப்படுகின்றது. ஆனால், 30 பைந்துக்கும் குறைவான குருதியே சராசரியாகக் கிடைக்கின்றது.

இதனால், யாழ். போதனா மருத்துவமனையில் குருதி வகைக்கு – குறிப்பாக பொது வழங்கியான ‘ஓ’ வகைக் குருதிக்கு பெருந்தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, பொது மக்கள் உதிரம் கொடுத்து உயிர் காக்கும் உன்னத பணியில் இணைய முன்வருமாறு இரத்த வங்கி பிரிவு கோரியுள்ளது.

குருதிக் கொடை வழங்க விரும்புபவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலுள்ள இரத்த வங்கிக்கு வருகை தருமாறும் தெரிவிக்கப்பட்டது.