நீதிமன்ற கட்டளையை மீறித் தொடரும் குருந்தூர்மலை விகாரை கட்டுமானப் பணிகள்: ரவிகரன் கண்டனம்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிமன்றக்கட்டளையை மீறித் தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலையில் தொடர்ந்தும் நீதிமன்றக் கட்டளையை மீறி கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்திய பின்னர் இது தொடர்பில் தனது கடுமையான கண்டனங்களை அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலையில் (12.06.2022)இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் (19.07.2022) அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.

ஆனால் அதன் பின்னர் இங்கு நீதிமன்றக் கட்டளையை மீறிக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் அவ்வாறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமைக்கு எதிராக முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கடந்த (23.02.2022) ஆம் திகதி நான் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து (02.03.2023)ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதமன்றக் கட்டளை மீறப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடும் செய்யப்பட்டது. அத்தோடு தொல்லியல் திணைக்களத்தினர் தமது செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எம்மீது வழக்குத் தொடர்கின்றனர்.

இந் நிலையில் தமது காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களமக்களுக்கு வழங்கப்பட்டுவிடுமோ என எமது தமிழ் மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான சூழலில் சில பெரும்பாண்மையின இனவாத அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியை நிரப்பும் நோக்குடனேயே இங்கு வருகைதருகின்றனர். ஆனால் இவ்வாறான பெரும்பாண்மையின இனவாத அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எமது நோக்கமல்ல. எமது தமிழ்மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

தமிழர்களின் பூர்வீக பகுதிகளான தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் ஆகிய கிராமங்கள் மீள்குடியேற்றப்படவேண்டும்.எமது தமிழ்மக்களுடைய காணிகள் பறிக்கப்படாமல் எமது மக்களிடமே அவை மீள கையளிக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.