மோடி ஓகஸ்ட்டில் இலங்கை வரமாட்டாா்! – தோ்தல் முடிந்த பின்னரே வருவாா் எனத் தகவல்

இந்தியாவின் பிரதமராக 3 ஆவது தடவையாகவும் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில் அந்த விஜயம் திடீரென பிற்போடப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற விழா கடந்த 9 ஆம்திகதி டில்லியில் இடம்பெற்ற போது அவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருத்ததுடன் நரேந்திர மோடியுடன் சந்திப்பையும் நடத்தியிருந்தார். இதன்போது தான் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என புதுடில்லி வட்டாரங்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக தகவல்களும் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்த நிலையில் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியும் இந்திய பத்திரிகைக்கு ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு பல் வேறு தரப்புகளுடனும் அதிரடி சந்திப்புக்கள் நடத்திய நிலையிலேயே தற்போது இந்தியப் பிரதமரின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு இந்தியாவில் மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் இலங்கைக்கு தனது முதல் விஜயத்தை கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரச தரப்பினருடனான சந்திப்புக்கு மேலதிகமாக அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவரது மகன் நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் மலையக தமிழ் கட்சிகளுடனும் அவசர சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.

இதில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் நடத்திய சந்திப்புக்களின் போது இந்தியாவின் சூரியசக்தி திட்டங்கள், மின் இணைப்புத் திட்டம் மற்றும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே முன்மொழியப்பட்ட பெட்ரோலியக் குழாய் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அவர் கவனம் செலுத்தியதுடன் இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் வரும் எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் இந்தத் திட்டங்கள் தடம் புரளாது தொடர்வதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவினால் நிதியளிக்கப்படும் எந்த திட்டங்களிலும் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தனது இலங்கை விஜயத்தின் போது வலியுறுத்தியமை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படப் போகின்றது என இந்தியா கருதுவதாகவே அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவந்தது.

இவ்வாறான நிலையிலேயே தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த உத்தியோகபூர்வ விஜயம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலின் பின்னரே அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவா, சஜித் பிரேமதாசவா அல்லது அநுரகுமார திஸாநாயக்கவா வெற்றி பெறுவார் என்ற சந்தேகம் இந்தியாவுக்கும் உள்ளதாலேயே அதாவது ஜனாதிபதித் தேர்தல் மூலம் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படலாமென இந்தியா கருத்துவதாலேயே இந்தியப் பிரதமரின் இலங்கைக்கான விஜயம் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.