முக்கிய காரணங்கள் இல்லாமல் யாரும் ரஷ்யாவுக்குச் செல்ல முடியாது – வெளிவிவகார இராஜாங்க அமைச்சா் அறிவிப்பு

Tharaka Balasuriya PMC 02 1 முக்கிய காரணங்கள் இல்லாமல் யாரும் ரஷ்யாவுக்குச் செல்ல முடியாது - வெளிவிவகார இராஜாங்க அமைச்சா் அறிவிப்புஇலங்கையர்கள் ரஷ்யாவுக்கு முக்கிய காரணங்கள் இல்லாமல் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. அத்துடன் இலங்கையிலிருந்து ஆண்கள் ரஷ்யாவுக்கு செல்வதாக இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற
வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கையின் விசேட குழுவினர் எதிர்வரும் ஐந்தாம் திகதி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் ரஷ்யாவிலுள்ள இலங்கையர்களை மீட்க ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறுத்தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், “போலியான வாக்குறுதிகளை நம்பியே இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்கள். இவ்வாறு விசிட் விசா முறைமையின் ஊடாக ரஷ்யாவுக்கு சென்ற 455 இலங்கையர்கள் தற்போது நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதகரத்துடனும்,மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்துடனும் விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் எமது நடவடிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சுடன் நேற்று வியாழகிழைமை நிகழ்நிலை ஊடாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருக்கின்றோம். இலங்கையா்களை யுத்த களத்துக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சிடம் வலியுறுத்தவுள்ளோம்.

ரஷ்யாவுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் தொடர்பில் பல பொய் செய்திகள் வெளிவருகின்றன. ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக
வெளியாகியுள்ள செய்தியும் பொய்யானது. ரஷ்ய யுத்தக்களத்துக்கு சென்றவர்களில் 16 இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர்.37 பேர் காயங்களுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள்.உயிரிழந்தவர்கள் தொடர்பான முழுமையாக தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இதேவேளை இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு முக்கிய காரணங்கள் இல்லாமல் செல்வதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். இலங்கையிலுள்ள ஆண்கள் ரஷ்யாவுக்கு செல்வதாக இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் விசேட குழுவினர் எதிர்வரும் ஐந்தாம் திகதி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளனர்.காயமடைந்துள்ள 37 இலங்கையளர்களை முதற்கட்டமாக நாட்டுக்கு அழைத்து வர பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றார்.