இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவரை மீட்க நடவடிக்கை – அமைச்சா் ஜெய்சங்கா்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதங்களுக்கு நேற்று பதில் கடிதம் அனுப்பி வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் நலன் காப்பதில் இந்திய மத்திய அரசு அதிக முன்னுரிமை கொடுத்திருப்பதாக கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க 10 ஆண்டுகளாக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மீனவர்களை விடுவிக்க கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1974 ஆம் ஆண்டில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாகவே மீனவர் பிரச்சினை தோற்றுவிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 214 இந்திய மீனவர்கள் 28 படகுகளுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.