குருந்துாா்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை நோக்கி பாத யாத்திரை

9 3 குருந்துாா்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை நோக்கி பாத யாத்திரைமுல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் பிக்குகள் பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி தொடக்கம் மகியங்கனையிலிருந்து பாத யாத்திரையை ஆரம்பித்த பிக்குகள் குழு இன்று முல்லைத்தீவு மாவட்டத்தை அடைந்து முல்லைத்தீவு குருந்தூர் மலையை நோக்கி செல்வதற்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.

நாளைய தினம் பௌத்தா்கள் பிரதனமாகக் கொண்டாடும் பௌசன் போயா தினத்தை முன்னிட்டு இந்த பாத யாத்திரை இடம்பெறுவதுடன், குருந்துாா் மலையில் அமைக்கப்பட்ட விகாரையிலும் விஷேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

யாத்திரைக்கான பயண வழியெங்கும் பொலிஸ் பாதுகாப்பு இடப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக, அளம்பில் சந்தியை அண்டிய பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்பதுடன், அப்பகுதியில் வீதித் தடுப்புக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அத்தோடு, பொலிஸாரின் பாதுகாப்புடன் தென்பகுதி மற்றும் வெளியூர்ப் பகுதிகளில் இருந்து வருகைதந்த பௌத்த மக்கள் வீதியின் இரு புறங்களிலும் பௌத்த மத கொடிகளை ஏற்றி, கூடாரங்களையும் அமைத்துள்ளனர்.