இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ஜனாதிபதி ரணில் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில்  இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இந்தியாவுக்கு 2 நாட்கள்  பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று மாலை வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளிதரன் வரவேற்றுள்ளார்.

இதன்பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் வரவேற்று கலந்துரையாடலில்  ஈடுபட்டார்.

ரணிலின் இந்த பயணத்தின் போது,இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 75ஆவது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடும் வேளையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி. திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற இந்திய உயரதிகாரிகளுடன் பரஸ்பர நலன்கள் குறித்து இருதரப்பு விவாதங்களை நடத்தவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.