அன்னம் சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவாா்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் கூட்டணிக்காக பயன்படுத்தப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரியவருகிறது.

சரத் பொன்சேகா 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில் மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிட்டார்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவில் வேட்பாளராக போட்டியிட வேண்டுமாயின் முதலில் கட்சியின் உறுப்பினராக வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்புமனுவை பெற்றுக்கொள்ளாமல் அன்னம் சின்னத்தில் போட்டியிட ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கான திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொண்டிருந்த நிலையில், முதலில் டிரான் அலஸ் தலைமையிலான ஐக்கிய மக்கள் கட்சியின் கையடக்கத் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் தற்போது புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், இதுவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.