ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த மாதம் ரணில் அறிவிப்பாா்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அடுத்த மாதம் அறிவிப்பார் என அமைச்சர் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்தார்.

“இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பலரால் ஒரு கதை பரப்பப்படுகிறது. அடுத்த மாதம் அவர் தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்” என நாணயக்கார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“நாட்டின் நலனுக்காக கடினமான நேரத்தில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம் விக்கிரமசிங்க தனது திறமையை நிரூபித்துள்ளார். பலர் அதைத் தவிர்த்தபோது அவர் அவ்வாறு செய்தார். இன்னும் பலர் பொறுப்பிலிருந்து ஓடிப்போய் தங்கள் அரசியல் எதிர்காலத்தை மட்டுமே நினைத்தனர்” என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், விக்ரமசிங்க தனியொரு கட்சியில் போட்டியிட மாட்டார் என்றும், ஜனாதிபதி தேர்தலில் பல சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் அவர் கூறினார்.

“மே தினத்தில் சஜித் அணியைச் சோ்ந்தவா்கள் ஏன் ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் ஏறவில்லை என சிலர் எங்களிடம் கேள்வி எழுப்புகின்றனர். இருப்பினும், அத்தகைய நிகழ்வுக்கு அவசரம் இல்லை. சரியான நேரத்தில் சேரக் காத்திருக்கும் எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ இணைவார்கள்” என்றும் அவா் தெரிவித்தாா்.