சம்பந்தனின் இடத்துக்கு சண்முகம் குகதாசன் நியமனம்

வெற்றிடமாகியுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ஆசனத்திற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சண்முகம் குகதாசனின் பெயரை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு
தெரிவித்திருந்தது. அந்த வர்த்தமானி நேற்று வெளியானது.

திருகோணமலை திரியாய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் குகதாசன் அரச அறிவியல் துறையில் முதுநிலை பட்டதாரியாவார். நீண்ட காலமாக கனடாவில் வசித்து வந்த சண்முகம் குகதாசன், 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத்தலைவராக இரண்டு சந்தர்ப்பங்களில் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் போட்டியிட்டிருந்தார். அந்த தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் காலஞ்சென்ற இராஜதவரோதயம் சம்பந்தனுக்கு பின்னர் அதிகூடிய வாக்குகளை அவர் பெற்றிருந்தார். பொதுத் தேர்தலில் அவர் 16 ஆயிரத்து 770 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.