தென்னாபிரிக்காவில் இடம்பெறும் பிறிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டை தவிர்க்கும் பூட்டீன்

எதிர்வரும் மாதம் தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள பிறிக்ஸ் கூட்டமைப்பு
நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்வதை ரஸ்யாவின் அதிபர் விளமிடீர் பூட்டீன்
தவிர்த்துள்ளதாக தென்னாபிரிக்காவின் அதிபர் சிறில் ராமபோசா தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இடம்பெறும் போர் தொடர்பான மனித உரிமை மீறல்கள் தொடர்பில்
பூட்டீன் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
தென்னாபிரிக்கா அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பு நாடாக
இருப்பதால் பூட்டீனை கைது செய்யுமாறு மேற்குலகம் அழுத்தம் கொடுத்து
வருகின்றது.

உக்ரைன் போரில் பூட்டீனுக்கு ஆதரவுகளை வழங்கிவரும் தென்னாபிரிக்கா
தற்போதைய தனது நெருக்கடியான நிலை தொடர்பில் ரஸ்ய அதிபருடன்
கலந்தாலோசனை செய்து இரு தரப்பும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக
தென்னாபிரிக்கா அரச தலைவரின் பேச்சாளர் கடந்த புதன்கிழமை (19)
தெரிவித்துள்ளார்.

பூட்டீன் முக்கிய தலைவர்களின் கூட்டத்தொடரில் காணொளி மூலம்
கலந்துகொள்வார் எனவும், நேரிடையாக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர்
கலந்துகொள்வார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட சூடானின் முன்னாள் அதிபர் அல்
பசீரை 2015 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அரசு கைது செய்வதற்கு மறுத்திருந்தது.
அவர் மீதும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.