சிவில் சமூகமும் இணைந்துள்ளதால் தமிழ் பொது வேட்பாளர் சாத்தியமே – விக்னேஸ்வரன் கூறுகிறா்

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முடியாத நிலைமை முன்னர் கட்சிகளுக்கு இருந்திருக்கலாம். இப்போது, சிவில் சமூகமும் இணைந்துள்ளதால் எம்மால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பதும் நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரன் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த சந்திப்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தினால் எமது வேட்பாளருக்கு முழுமையாக வாக்களிக்க மக்களிடம் கோரலாம்.
அவர்கள் தேவையெனில், இரண்டாவது – மூன்றாவது வாக்கை வேறு ஒருவருக்கு வழங்குவதில் பிரச்னையில்லை. தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதுதான் முக்கியமானது. இதனால், உலகத்துக்கு எமது தனித்துவத்தை எடுத்துக் காட்டமுடியும்.

தமிழ் பொது வேட்பாளரை எம்மால் கொண்டு வரமுடியாத நிலைமை முன்னர் இருந்திருக்கலாம். இப்போது நாம் அவ்வாறு இல்லை. சிவில் சமூகத்தை சேர்த்துக்கொண்டு போவதால் பொது வேட்பாளரை நிறுத்த முடியும். இதை
முரண்பாட்டுக்கு உரியதாக்கி பொதுவெளியில் கொண்டுவருவது திசைதிருப்பும் முயற்சி.

புதியவர் ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் இப்போது எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கை மாற்றமடையும். இந்த மாற்றம் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். அவ்வாறு பாதித்தால் பொருளாதார முன்னேற்றம் தடைப்படும். இதனால் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பதாக இருந்தால் அது நல்லது இதுவரையும் இருக்கும் ஒருவரை இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கவிட்டால் என்ன பிரச்னை? மக்கள் மூலம் தெரிவானவர் அல்ல என்று தெரிந்து அவரை (ரணிலை) இதுவரை பதவியில் இருக்க விட்டுவைத்துவிட்டு, அவர் (ரணில்) ஊடாக நாட்டுக்கு நன்மையை பெற்றுவிட்டு இப்போது மக்களால் கொண்டுவரப்பட்டவர் அல்ல என்று கூறுவதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார்.