ஜெனிவா பரிந்துரைகளை இலங்கை அரசு செயற்படுத்த வேண்டும் – இணைத் தலைமை நாடுகள்

இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளைச் செயற்படுத்த வேண்டும் என இணைத் தலைமை நாடுகள் தமது அறிக்கையில் கோரியுள்ளன. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 56ஆம் அமர்வில் இலங்கைத் தொடர்பான இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை நேற்று முன்வைக்கப்பட்டது. இதில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.

கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இந்த குழுவின் அறிக்கையில் இலங்கை அரசாங்கம் தாம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பலவந்தமான காணாமல் போதல்களால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் அனைத்து சமூகங்கள் மீதான அதன் தாக்கத்தையும் நிவர்த்தி செய்வதற்கு என அதில் கோரப்பட்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் உட்பட இலங்கையினால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எந்தவொரு புதிய சட்டமும், அனைவரதும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது உட்பட அதன் மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியமானதாகும்.

நீதித்துறை சுதந்திரம், நாட்டின் சட்ட நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து
காணிகள் விடுவிக்கப்படுவது வரவேற்கப்படுகின்றது. அதேவேளை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பான பதற்றங்கள், தன்னிச்சையான கைதுகள், ஒழுங்கற்ற தேடுதல்கள் மற்றும் தடுப்புக்காவலின் போது மோசமான முறையில் நடத்தப்படல் போன்ற நிலைமைகள் குறித்து கரிசனைக் கொள்ளவேண்டியுள்ளது.

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகள் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதை உறுதிசெய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.