சம்பந்தனின் பூதவுடலுக்கு நாடாளுமன்றில் நாளை அஞ்சலி – இறுதிக் கிரியை திருமலையில்

sampanthan சம்பந்தனின் பூதவுடலுக்கு நாடாளுமன்றில் நாளை அஞ்சலி - இறுதிக் கிரியை திருமலையில்இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக நாளை புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படும். இறுதிக் கிரியைகள் அவரின் சொந்த இடமான திருகோணமலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அரச நிகழ்வாக நடைபெறவுள்ளது.

இதேநேரம், இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அவரின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வடக்கு, கிழக்கு முழுவதும் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று நடை பெற்றன. அத்துடன், தமிழ் அரசுக் கட்சியின் பணிமனைகளில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார். சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு – பொரளை ஏ.எவ்.றேமண்ட் மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

நாளை புதன்கிழமை நண்பகலின் பின்னர் பூதவுடல் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும். பின்னர் பிற்பகல் 4 மணிக்கு சம்பந்தனின் பூதவுடல் நாடாளுமன்றத்தில் இருந்து அவரின் சொந்த இடமான திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெறும். இறுதிக் கிரியைகள் அரச நிகழ்வாக சம்பந்தனின் இந்து மத முறைப்படி நடைபெறும். அரச நிகழ்வாயினும் சம்பந்தனின் குடும்பத்தினரின் கோரிக்கையின் பிரகாரம் இராணுவ மரியாதை நிகழ்வு நடைபெறாது என்றும் தெரிய வருகின்றது.